பிச்சாயி அம்மன் – வீரப்பசுவாமி திருக்கோவில்

வீரப்பசுவாமி - பிச்சாயி அம்மன்

பிச்சாயி வீரய்யா கதையை அறிந்திருப்பீர்கள். அவளுக்காக கட்டப்பட்ட கோவில் பெருமாள் மலையின் அடிவாரத்தில் இருக்கிறது. அதன் கதையையும், நான் சென்று வந்தேன் என்பதையும் முன்பே கூறியிருக்கிறேன். அந்தக் கோவில் கல்லெரிந்த குலம் போல எனக்குள் நி்னைவலைகளை எழுப்பிக் கொண்டேயிருக்கிறது. அந்த நினைவுகளே இந்த இடுகை.

துறையூரிலிருந்து பெருமாள் மலைக்கு பேருந்துகள் இருக்கின்றன. தனியாக வாகணங்களில் சென்றால்கூட வழிகாட்ட மக்கள் இருக்கும் பூமி அது. மலையின் அடிவாரத்திலிருந்து ஒரு சாலை உள்ளே செல்கிறது. அந்த சாலையின் வலது புறத்தில் ஒரு ஆர்ச் பிச்சாயின் கோவிலிருப்பதை மக்களுக்கு சொல்ல கட்டப்பட்டிருக்கிறது. அதற்கு எதிரே ஒரு பழைய பலகையில் பிச்சாயி அம்மன் கோவில் என்று எழுதப்பட்டிருக்கிறது. ஆர்ச் இல்லாத காலத்தில் நான்தான் கோவிலுக்கு வழிகாட்டினேன் என அந்தப் பலகை பெருமை கொள்வதாக தோன்றியது. அந்த பூமியில் கால்வைத்ததும் மெல்லிய குரலில் பிச்சாயி கதை எனக்குள் ஒலிக்கத்தொடங்கியது. இங்குதான் அவள் நிறைமாத கர்பிணியாக வந்திருக்கிறாள். அவள் கணவன் இங்கிருக்கும் ஏதோ ஒரு நிலத்தில் தான் பாடுபட்டிருக்கிறான் என்ற உண்மையில்,. அந்த இடத்திற்கும் எனக்கும் ஏதோ ஒரு நெருக்கம் ஏற்பட்டது.

பிச்சாயி கோவில்

ஆர்ச் உள்ளே நுழைந்தால், அந்த பச்சை பசேலென சுற்றி வயல்வெளி இருக்கும் பகுதியில் புதிய கட்டிடம் மின்னுகிறது. சிறுபறவைகளின் சத்தத்தில் மிக ரம்மியமான ஒரு கிராமக் கோவில். 2009ல் மகா கும்பாபிசேகம் நடைபெற்றதை கல்வெட்டு சொல்கிறது. சுற்றியிருக்கும் மதில் சுவர்களில் சிவன் கோவில்களில் நந்தியும், பெருமாள் கோவில்களில் கருடனும் இருப்பதை போல காமதேனு இருக்கிறாள். இருபுறமும் மாலைகளை கையில் வைத்துக்கொண்டு பெண்கள் நிற்க, கையில் ஒரு குழந்தையுடன் வாசலுக்கு மேல் இருக்கும் கோபுரத்தில் பிச்சாயி சிரித்தபடி இருக்கிறாள். வாசலின் இருபுறமும் துவாரபாலகிகள் கையில் கதையுடன் இருக்கின்றார்கள். ஒரு சிலையின் பின்பத்தினை மறுபுறம் வைத்திருப்பதாகவே தோன்றியது. ஏழு வித்தியாசங்கள் கண்டுபிடிக்கும் போட்டிக்கு கூட அனுப்பி வைக்கலாம். அந்தளவிற்கு உருவ ஒற்றுமை உள்ள சிலைகள்.

ஒரே பீடத்தில் பிள்ளையார் முதல் பெருமாள் வரை

கதவு மூடப்பட்டிருக்கும் போதுகூட பக்தர்கள் தரிசனம் செய்ய ஏற்றவாறு கம்பிகள் வைத்து கதவு போடப்பட்டிருந்தது. அதை திறந்து கொண்டு பக்தர் நுழைய நாங்களும் பின்தொடர்ந்தோம். உள்ளே ஒரு பீடத்தில் பிச்சாயி, வீரய்யா, பெருமாள், கணபதி, ஐயனார், கன்னிமார் என தெய்வங்கள் இருந்தன. இடது புறத்தில் 18 கற்கள் வைக்கப்பட்டிருந்தன. அவை எந்த தெய்வங்களை குறிக்கின்றன என தெரியவில்லை. மறுபுறம் அதே போன்று மூன்று கற்கள் இருந்தன. மூன்று கன்னிகள் பற்றி கேள்வியுற்றிருக்கிறேன். ஒரு வேளை அதுவாக இருக்கலாம் என்ற முடிவுக்குதான் வர முடிந்தது. வழிபட வந்த பக்தரிடம் விசாரித்தேன். அவருக்கு பிச்சம்மா, வீரய்யா பற்றி மட்டும் தெரிந்திருந்தது. எல்லைகளற்ற இந்த பூமியில் இன்னும் எத்தனை லட்சம் கதைகள் கிடைக்காமல் இருக்கிறன என பெருமூச்சு விட்டேன்.

அழகு குதிரைகள்

வாகனமாக இரு வெள்ளைக் குதிரைகள் கோவிலின் முன்புறம் இருக்கின்றன. இரு குதிரைகளும் கொள்ளை அழகு. அதிலும் ஒரு குதிரைக்கும் மற்றொரு குதிரைக்கும் இடையே ஏகப்பட்ட வித்தியாசங்கள். வலதுபுறம் இருக்கும் குதிரை உயரமாகவும், ஏகப்பட்ட ஆபரணங்கள் அணிந்தும் இருக்கிறது. பார்க்கையில் கொஞ்சம் மூர்க்கமாக இருக்கும் அந்தக் குதிரையின் கழுத்துப்பகுதியின் கீழ் யாளின் உருவம் தெரிகிறது. கால்களில் இரண்டு காப்புகள் போடப்பட்டிருக்கின்றன. அதன் வால் பகுதி வரிவரியாக செதுக்கப்பட்டிருக்கிறது. அதன் முதுகில் துப்பாக்கியொன்று இருப்பதை காணமுடிந்தது. இடது புறம் இருக்கும் குதிரை சற்று குட்டையாக, ஆபரங்கள் குறைந்து காணப்படுகிறது. பொதுவாக இரு குதிரைகள் இருக்கும் கோவில்களில் வேறுபாட்டிற்காக நிறம் மாறியிருப்பதினை மட்டுமே பார்த்திருக்கிறேன். ஆனால் இது வித்தியாசமான அனுபவம்.

18 கடவுள்கள்

அருகில் ஒரு பெரிய கிணறு இருக்கிறது. வயல்வெளி பாசனத்திற்கு பயன்படுத்திக் கொள்ள வைத்திருக்கின்றார்கள். பிச்சாயி கோவிலிருந்து பார்க்கும் போது பெருமாள் மலை தரிசனம் தருகிறது. வீரய்யாவின் கடவுளை தரினசம் செய்ய பெருமாள் மலைக்கு சென்றோம். வழிநெடுகிலும் வாணரங்கள் தெரிந்தன. சில இடங்களில் குவியலாக சோறுகள் போடப்பட்டிருந்தன. வாகணத்தில் ஏறும் போது, வீரய்யா இந்த மலையில் நடந்து ஏறி தினம் பெருமாளை தரிசித்திருக்கிறார் என்று தோன்றியதுபோது சிலிர்த்தது.

மலையில் கோவிலில் வெளிச்சம் இல்லாமல் இருள் சூழ்ந்து இருந்தது. சில சமயம் குரங்கள் உள்ளே இருக்க வாய்ப்புண்டு எனவே ஜக்கிரதையாக செல்லுங்கள் என அங்கு வந்திருந்த ஒருவர் எச்சரித்தார். பயந்து கொண்டு சென்றோம். நல்லவேளையாக குரங்குகள் எதுவும் இல்லை. இரு பிராட்டிகளுடன் பெருமாள் இருக்கிறார். தென் திருப்பதி என ஐயர் சொன்னார். கருப்பு சாமி கோவிலுக்குள் இருந்தது. பெருமாளின் அவதாரமாக கருப்பை சொல்லுவார்கள். ஒரு அடிக்கும் குறைவான மூன்று குதிரைகள். அதில் ஒரு குதிரையில் கருப்பு வீற்றிருக்கிறார். அங்கே திருநீறு கொட்டிக்கிடந்தது வியப்பாக இருந்தது. பெருமாள் கோவிலில் திருநீர் இருப்பதை முதன் முறையாக அப்போதுதான் பார்த்தேன்.

இணையத்தில் படித்து, கோவிலை தேடி பிச்சாயை பார்த்துவிட்டு திரும்புகிறேன் என நினைக்கும் போது, எல்லையற்ற தேடலின் இன்பம் எனக்குள் குடிகொண்டது. ஒரு பறவையின் எச்சத்திலிருந்து விழுந்த விதை ஆழமரமாக வளர்ந்து அதன் வேர்களை பரப்பி எழுந்து நிற்பதைப்போல சில முன்னோர்கள் காலங்களை கடந்து மனிதர்களுக்குள் நிலைத்துக்கொண்டு இருக்கின்றார்கள். அதற்கு சாட்சி இந்த பிச்சாயி அம்மன் – வீரப்பசுவாமி திருக்கோவில்.

12 comments on “பிச்சாயி அம்மன் – வீரப்பசுவாமி திருக்கோவில்

 1. படைப்பாளி சொல்கிறார்:

  எத்தனை சாமிகள்..எத்தனை வரலாறு..எப்படிப்பா உன்னால மட்டும் முடியுது…இதற்கான உங்கள் உழைப்பு அபாரம்.வரலாற்றை அடுத்த தலைமுறைக்கு அழைத்து செல்கிறீர்கள்.

  • ஜெகதீஸ்வரன் சொல்கிறார்:

   நான் கதைகளை தேடுவது, தேடலின் இன்பத்தினால்தான். தேடுகின்ற கதை கிடைக்கும் போது ஏற்படும் மகிழ்ச்சியில் அளவே இல்லை. வலைப்பூவில் பதிப்பதற்கு காரணம், என்னுடைய குலதெய்வத்தின் கதையை கண்டறிய மிகவும் கஷ்டப்பட்டேன். நான் தெரிந்து கொள்ளும் போது கதைகள் திரிந்தே கிடைத்தன. உண்மைக் கதையை தேடி அலைபவர்கள் என்னைப்போல கஷ்டப்படாமல் இருக்கட்டுமே என்பதுதான்.

 2. தஞ்சைசரவணன் சொல்கிறார்:

  //அந்த பூமியில் கால்வைத்ததும் மெல்லிய குரலில் பிச்சாயி கதை எனக்குள் ஒலிக்கத்தொடங்கியது. இங்குதான் அவள் நிறைமாத கர்பிணியாக வந்திருக்கிறாள். அவள் கணவன் இங்கிருக்கும் ஏதோ ஒரு நிலத்தில் தான் பாடுபட்டிருக்கிறான் என்ற உண்மையில்,. அந்த இடத்திற்கும் எனக்கும் ஏதோ ஒரு நெருக்கம் ஏற்பட்டது. //

  உண்மையில் மிகவும் அனுபவித்து எழிதியிருக்கீர்கள் ! இந்த அனுபவ கிறுக்கல்களே சரித்திரம் தொடும் எழுத்துகளுக்கு முதல்படி நன்று இதுபோன்ற பதிவைத்தான் எதிபார்த்தேன் !

  • ஜெகதீஸ்வரன் சொல்கிறார்:

   உங்கள் எதிர்பார்ப்பு பூர்த்தியாகி இருப்பது, மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. பிச்சாயி பற்றியே மூன்று இடுகைகள் இட்டுவிட்டோம் படிப்பவர்களுக்கு எப்படி இருக்கப் போகிறதோ என்று பயந்துகொண்டே எழுதினேன். ஆனால் இப்போது மிக சந்தோசமாக இருக்கறது.

 3. Ganesh.K.T.P சொல்கிறார்:

  உணர்வுப்பூர்வமான அனுபவம். உங்களின் சிலிர்ப்பு படிக்கும் போது எனக்கு ஏற்பபட்டது. ஏதோ ஒரு இடத்தில் கதையை கண்டுபிடித்து அதன் பிறப்பிடத்திற்கு சென்று அதை எங்களுடன் பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி.

  இதைப்போல வேறெதும் தேடலை கையில் எடுங்கள் நண்பா!. அது நிச்சயம் தமிழ் உலகிற்கே பயனுள்ளதாக இருக்கும்.

  • ஜெகதீஸ்வரன் சொல்கிறார்:

   நன்றி நண்பா. இந்த புதிய தேடல் பற்றி நானும் சிந்தித்துக்கொண்டு இருக்கிறேன். பிரபல எழுத்தாளர்களின் சிறந்த கதைகளை தேடலாம் என்று ஒரு எண்ணம் இருக்கிறது. கதைகளின் மீதுள்ள காதல் அதை செயல்படுத்தும் என நினைக்கிறேன்.

 4. கேள்விநாயகன் சொல்கிறார்:

  பிச்சாயை ஏன் தேடிப்போனிர்கள்.

 5. mallikaa சொல்கிறார்:

  உண்மையில் நம் முன்னோர்களை சாமியாக வணங்கும் மரபு நம் தமிழகத்தில் இன்றும் உள்ளது அதை இணையத்தில் கொண்டுவரும் உமது பகிர்வு பாராட்டுக்குரியது நன்றி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s