கொஞ்சும் மழலை ஞாபகங்கள்

நேற்று காலை மிகுந்த மகிழ்ச்சியாக விடிந்தது. நெடுநாட்கள் சந்தித்திராத தோழனைப் பார்த்ததுபோல் மகிழ்ச்சி. எல்லாவற்றுக்கும் காரணம் மழைதான். சட சடவென சத்தமிட்டுக் கொண்டிருக்கும் மழையில் வெற்று உடம்புடன் நனையும் போது எதோ இயற்கை அன்னையோடு விளையாடுவது போல இருக்கும். கொஞ்சம் நனைந்துவிட்டு வந்தபின் அம்மா வைத்திருந்த சுக்கு காபியை அருந்தியபடி அமர்ந்தேன்.

நானும் அம்மாவும் மழையைப் பற்றி பேசத்தொடங்கினோம். எங்களூரில் மழை பெய்யும் போது, உள்ளுக்குள் கலக்கமாக இருக்கும். வாழை என்னாச்சோ, அம்மாச்சி வீடும் ஒழுகுமே என்றெல்லாம் ஆயிரம் கவலைகள். இரவு மழையையும் காற்றையும் ரசிக்காமல் வீட்டில் எல்லோரும் பயந்தபடி இருப்பார்கள். காலை வயலுக்கு சென்ற அப்பா திரும்பும் வரை யார் முகத்திலும் மகிழ்ச்சியை பார்க்கவே முடியாது. ஆனால் சென்னையில் மழை பெய்தால் கொண்டாட்டம்தான். வாகணங்களின் புகையையே சுவாசித்து சுவாசித்து நொந்து கிடக்கும் நாசிகளுக்கு எழுந்துவரும் மண்வாசனையை அலாதி இன்பம்.

எங்கள் பேச்சுக்கிடையே அந்தப் பாடல் ஞாபகத்திற்கு வந்தது.

மழ வருது மழ வருது
நெல்ல அள்ளுங்க
முக்காப்படி அரிசி போட்டு
முறுக்கச் சுடுங்க
ஏறு ஓட்டுற மாமனுக்கு
எண்ணி வையிங்க
சும்மாருக்குற மாமனுக்கு
சூடு வையிங்க.

சிறுவயதில் பாடலின் கடைசி வரை மெதுவாக பாடிவிட்டு சூடு வையிங்க என்று சத்தமாக கத்துவோம். மழையுடன் வரும் மண்வாசனையோடு இந்தப் பாடலும் வந்துவிடும். ஒருவர் காய்ந்து கொண்டிருக்கும் துணிகளை எடுக்கச் செல்ல, மற்றொருவர் புளி, பருப்பென வெயிலுக்காக காத்திருந்தவைகளை அள்ளிச் செல்வோம்.

உழைப்பவனுக்கு சன்மானமும், உழைக்காதவனுக்கு தண்டனையும் கொடுக்கப்படும் என சிறுகுழந்தையிலேயே மனதில் பதியவைக்கும் முயற்சி அது. அதுபோல ஏராளமாக இருக்கின்றன. விளையாட்டாக வாழ்வின் படிப்பினைகளை உணர்த்தும் முயற்சிகள் அதிகம். இப்போதும் கிராமப் பள்ளிகளில் இப்பழக்கம் இருக்கிறது. நகரப் பள்ளிகளில் இருக்கிறதா என தெரியவில்லை.

ஆரா மீனுக்கும் அயர மீனுக்கும்
நடு ஏரியில் சண்ட
வெலக்கப் போன வெறா மீனுக்கு
ஒடஞ்சி போச்சாம் மண்ட

இது அனுபவ மொழி. தனக்கு சம்மந்தமில்லாத சண்டையில் தலையிட்டு அடிவாங்கியவனின் அனுபவ வார்த்தைகள். அழகாக மீன்களை துணைக்கழைத்து எல்லோருக்கும் சென்றடைய செய்திருக்கின்றனர்.

அதே கருத்தினை பழமொழிகளும் எடுத்துரைக்கின்றன என்றாலும், அதன் வீரியம் அதிகம் என்பது என் கருத்து.

5 comments on “கொஞ்சும் மழலை ஞாபகங்கள்

 1. ம‌கிடேஸ்வ‌ர‌ன் செ சொல்கிறார்:

  என்னை என்னிட‌மே சில‌ நிமிட‌ங்க‌ள் இர‌வ‌ல் வாங்கி மீண்டும் ம‌ழ‌லைக்கால‌த்திற்கே கூட்டிச்சென்று ம‌கிழ‌வைத்த (மழ வருது மழ வருது நெல்ல அள்ளுங்க) ம‌ழைக்கால‌ம் உங்கள‌து வ‌ரிக‌ள்.

  மிக‌வும் அருமை…
  இங்கே ச‌கோத‌ர‌னாக‌ என‌து த‌மிழாசிரிய‌ரை நினைக்க‌ முடிந்த‌து.

  இப்ப‌டித்தான் கிராம‌த்து குழ‌ந்தைகளின் வாய்வ‌ழிப்பாட‌ல்க‌ளை வ‌குப்ப‌றையில் பாடிக்காட்டுவார்.
  நாங்க‌ளும் வேடிக்கையென‌ நினைத்து கேட்டுமுடித்த‌ நேர‌த்தில் அதில் உள்ள‌ க‌ருத்துக்க‌ளை சுட்டிக்காட்டி வேடிக்கைதான் என்றாலும் வாழ்க்கை என்ப‌தை புரிய‌வைப்பார்.
  இந்த‌ 23 வ‌ய‌தில் நான் 43 வ‌ய‌து அனுப‌வ‌ம் பெற்ற‌மைக்கு அவ‌ரும் ஒரு கார‌ண‌ம்.

  ஏன்! நீங்க‌ளும் கூட‌…

  ந‌ன்றி ச‌கோத‌ரா…

  சகோதரன் இணையதளத்தில் இரண்டு லட்சம் ஹிட்சுகளை க‌ட‌ந்து சாத‌னை ப‌டைத்துவ‌ரும் உங்க‌ள‌து ப‌ணி மென்மேலும் வ‌ள‌ர‌ என‌து *வாழ்த்துக்க‌ள்*…

 2. adhithakarikalan சொல்கிறார்:

  என்னுடைய குழந்தை பருவத்திற்கு என் ஞாபகங்களை கூட்டி சென்றதற்கு நன்றி…

 3. நித்யா சொல்கிறார்:

  பாடலுடன் மழையைப் பற்றிய பகிர்வு அருமை!

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s