இன்று சுதந்திரத்திற்கு அகரம் எழுதுவோம்

கல்விதான் மனிதனுடைய அடுத்தக் கட்ட பரிணாம வளர்ச்சிக்கு கொண்டு செல்கிறது. ஆனால் நல்ல மதிப்பெண்களை பெற்றிருந்தும் கல்வியை தொடர முடியாமல் செல்கின்ற பலரை என் வாழ்க்கையில் சந்தித்திருக்கிறேன். கிராமத்தில் இருப்பவர்களுக்கு கல்வி ஒரு கனவு. மேல்படிப்பும், நல்ல வேலையும் சமூக அந்தஸ்தும் ஒரு போதை. இப்போது கூட அவர்களிடம் பெரியவனாக ஆகியதும் என்ன செய்ய போகிறாய் என கேட்டால் எல்லோரும் போலிஸ், டாக்டர், இன்ஜினியர், ஆசிரியர் என்பார்கள். கௌரவமான தொழில் செய்ய வேண்டும் என அவர்களின் மனதில் சிறுவயதிலேயே பதிந்துவிடுகிறது.

சிறுவயதிலிருந்து “நான் டாக்டராக போகிறேன்” என்று நம்பிக்கையுடன் வளர்பவர்கள். திடிரென பணம், சமூகம், குடும்பச் சூழ்நிலை என பல எதிரிகள் முன் வரும்போது எதிர்க்க முடியாமல் போகின்றார்கள். பலர் மௌனமாக ஏற்றுக்கொள்கிறார்கள். சிலர் மறுத்து மரித்துப் போகின்றார்கள். ஆனால் முடிவுகள் அவர்கள் மீது திணிக்கப்படுகிறது என்பது மறுக்க முடியாத உண்மை.

என்னுடைய வகுப்பில் முதல் மதிப்பெண் பெருகின்ற பெண் அவள். அவளிடம் மாணவிகளுக்குரிய கலகலப்பு இருக்காது. மெல்லிய இழையோடிய சோகம் எப்போதும் அவளிடம் இருப்பதை உணர்ந்திருக்கிறேன். அதற்கு காரணம் குடும்பம் என்பதை பிறகு தெரிந்து கொண்டேன். தகப்பன் இறந்துவிட தாயின் உழைப்பினை நம்பி வாழ்கின்ற அவளுக்கு, தங்கை வேறு. அவள் கதையை அறிந்து கொண்டபின் எனக்கோ ஏதோ பழைய படத்தின் ஞாபகம். உங்களுக்கும் கூட அப்படி இருக்கலாம். சரி.

ஒரு சமயம் தாய்க்கும் உடல்நிலை மோசமாக அவளுடைய தாய் மாமனுக்கு திருமணம் செய்துவைத்து விட்டார்கள். பள்ளிப் படிப்பும் அத்துடன் முடிந்துபோனது. அவளுடைய கைகளிலிருந்து புத்தகங்கள் பரிக்கப்பட்டு கரண்டி திணிக்கப்பட்டது. அவளுடைய அத்தனை வருட படிப்பும் செல்லாக்காசாக மாறிப்போவதை கண்களால் பார்த்துக் கொண்டிருந்தேன். இவளின் கதை இப்படியென்றால் என் பக்கத்துதெருவில் வசித்த மாணவனின் கதை இன்னும் சோகமானது.

குடித்து குடித்து குடல் வெந்துபோய் அவன் தகப்பன் படுக்கையில் இருந்தார். அவருடைய மருத்துவச் செலவுக்காக சேமிப்பில் இருந்த பணமும் தீர்ந்துபோய், கடனும் வந்தது. ஆனால் கிடைக்கின்ற சொற்ப பணத்திலும் மீண்டும் மீண்டும் குடித்து நோய் முற்றி இறந்து போனார். அவனை படிக்க வைக்க ஆள் இல்லை. கல்லூரிப்படிப்பிற்காக ஏங்கிய அவனை வேலைக்கு போகச் சொல்லி எல்லோரும் வற்புறுத்த, அவன் தற்கொலை செய்யும் முடிவுக்கு வந்தான். கயிறெல்லாம் விட்டத்தில் கட்டி கட்டிலின் மீது ஏறி நிற்கையில் கால் தவறி, கழுத்தில் கையிறு அழுத்தி கனம் தாங்காமல் அறுந்து விழுந்தாலும், ஆண்குறி கட்டிலில் பட்டு ரத்தம் நிற்காமல் போக துடிதுடித்து இறந்தே போனான். இரண்டு மணி நேரமாவது அவன் உயிரோடு போராடிக்கொண்டு இருந்திருப்பான் என ஊரில் பேசிக்கொண்டனர்.

அவனுக்கு வாழ்க்கை மட்டுமல்ல, மரணமும் எளிதாக அமையவில்லை. பலரும் அவனுடைய உறவுகள், குடும்பங்கள் மீது கோபம் கொண்டார்கள். ஆனால் அவனின் குடும்பத்தினை குற்றம் சாட்டிவி்ட்டு நாம் நடையை கட்டமுடியாது. நம் மீதும் தவறுகள் இருக்கின்றன. ஏனென்றால் நாமும் இதே சமூகத்தில்தான் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். நமக்கும் பொறுப்புகள் இருக்கின்றன. நம்மால் என்ன செய்ய முடியுமோ அதனைச் செய்தாலே போதும். ஏதோ என்னால் முடிந்தது அகரத்தினை இணையத்தில் பரப்புவதுதான்.

நடிகர் சூர்யாவின் அகரம் அமைப்பினைப் பற்றி இன்று விஜய் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பினார்கள். அதனை மறக்காமல் பார்க்கச் சொல்லி நேற்றே நண்பர்கள் பலரிடமிருந்தும் இணைய கடிதம் கணினியை நிறைத்தது. விதை என்ற புதிய கிளை அமைப்பில் தகுதி வாய்ந்த பணமில்லாத மாணவ கண்மணிகளுக்காக ஆரமித்திருக்கின்றார்கள். 6436 மாணவர்களில் அவர்களால் 159 பேருக்கு மட்டுமே உதவ முடிந்திருக்கிறது. அமைப்பின் பொருளாதாரத்தையும், தன்னார்வத் தொண்டர்களையும், நன்கொடையாளர்களையும் அதிகமாக கொண்டிருந்தால் இன்னும் நிறைய மாணவர்களுக்கு அவர்கள் உதவுவார்கள் என்று தோன்றியது.

உங்களுக்கும் உதவுவதற்கான விருப்பம் இருந்தால், தன்னார்வ தொண்டர்கள் என்று பதிந்து கொள்ளுங்கள். அதற்கு இங்கு சொடுக்குங்கள். நிறைய குடும்பங்களின் வளர்சசிக்கு எதிராய் ஏழ்மை, குடி, போதை என்றே இருக்கின்றன. நடுத்தர குடும்பத்தினை நடுதெருவுக்கு கொண்டு வர இன்று ஒரு மருத்துவச் செலவே போதும். நம்மால் இயன்றதை செய்திடுவோம்.

அகரம் தளம் –

agaram foundation

11 comments on “இன்று சுதந்திரத்திற்கு அகரம் எழுதுவோம்

  1. படைப்பாளி சொல்கிறார்:

    நல்ல செய்தி..தேவையான விஷயம்..

  2. […] நேத்தே இந்த நிகழ்ச்சி பத்தின விரிவான ஒரு பதிவைப் பார்த்தேன். அவருக்கு என் […]

  3. padmahari சொல்கிறார்:

    நல்லா எழுதியிருக்கீங்க நண்பரே! வாழ்த்துக்கள், இது மாதிரி விஷயங்கள ஆதரிக்கத்தான் ஆளே இல்லை வலையுலகத்துல. என்னோட ஆதங்கத்தை இந்த விதை நிகழ்ச்சி குறித்த என் பதிவில் எழுதியிருக்கிறேன். நேரமிருந்தா படிச்சிட்டு உங்க கருத்தைச் சொல்லுங்க!! நன்றி.
    பத்மஹரி.
    http://padmahari.wordpress.com

    • ஜெகதீஸ்வரன் சொல்கிறார்:

      இது மாதிரி விஷயங்கள ஆதரிக்கத்தான் ஆளே இல்லை வலையுலகத்துல.

      மிகச் சரியாக சொன்னீர்கள். அதற்காக நாம் நம்முடைய எண்ணங்களைப் பதிப்பதை நிறுத்திவிடக் கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறேன். ஏதோ என்னைப் போன்ற ஒருவராவது இருக்க மாட்டார்களா என்று ஏங்கியிருக்கிறேன். நீங்கள் இருக்கின்றீர்கள் என்பதே மகிழ்ச்சி.

      உங்களுடைய வலைப்பூவிற்கு வந்தேன். என்னைப் பற்றி குறிப்பிட்டமைக்கு மிக்க நன்றி!

  4. adhithakarikalan சொல்கிறார்:

    நல்ல கட்டுரை… விதை முளைத்து விருட்சமாக என் வாழ்த்துகள், கண்டிப்பாக என்னால் இயன்ற உதவியை செய்வேன்…

  5. RAVIKUMAR சொல்கிறார்:

    NICE

  6. sandi சொல்கிறார்:

    இது மாதிரி விஷயங்கள ஆதரிக்கத்தான் ஆளே இல்லை வலையுலகத்துல.

    மிகச் சரியாக சொன்னீர்கள். அதற்காக நாம் நம்முடைய எண்ணங்களைப் பதிப்பதை நிறுத்திவிடக் கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறேன். ஏதோ என்னைப் போன்ற ஒருவராவது இருக்க மாட்டார்களா என்று ஏங்கியிருக்கிறேன். நீங்கள் இருக்கின்றீர்கள் என்பதே மகிழ்ச்சி.

ஜெகதீஸ்வரன் -க்கு பதில் அளிக்கவும் மறுமொழியை நிராகரி