பெண்கள் மார்பகத்தில் கட்டி இருப்பதை கண்டறியும் முறை

பெண்களுக்கானது என்றவுடன் உடனே இடத்தை காலி செய்து விடாதீர்கள். உங்கள் வீட்டில் இருக்கும் பெண்களுக்கு உபயோகமாக இருக்கும் பதிவு இது. டாக்டர் கீதா மத்தாய் ஹலோ டாக்டர் ..! பகுதிக்காக தினமலரில் எழுதியது.

பெண்களுக்கு மார்பகத்தில் கட்டி போன்று ஏதாவது தென்பட்டால் அதிர்ச்சி தான். ஏனெனில், மார்பகங்களில் திண்ணமாக ஏதாவது தென் பட்டாலே அது கேன்சர் தான் என்பது போல், பத்திரிகைகளில் செய்தி வெளியாகி விடுவது தான் காரணம். ஆனால், எவ்வளவு அறிவுறுத்தினாலும், மார்பகத்தில் திண்ணமாக இருப்பது, தானாகவே சரியாகி விடும் என்றும், பல பெண்கள் கருதுகின்றனர். அறியாமை, பயம் ஆகிய காரணங்களால், தகுந்த மருத்துவரிடம் காண்பிக்க, பெண்கள் தயங்குகின்றனர்.

மார்பகப் புற்றுநோய், இந்திய பெண்களிடையே சர்வ சாதாரணமாக காணப்படுகிறது. கிராமப்புறங்களில், ஒரு லட்சம் பெண்களில் 8 பேருக்கும், நகர்புறங்களில் 27 பேருக்கும், மார்பகப் புற்றுநோய் ஏற்படுகிறது. இந்த புள்ளி விவரம் தவறாகவும் இருக்கக் கூடும். எனினும், கட்டி தென்படும்போது, அதை மருத்துவரிடம் காண்பிக்கும் பழக்கம், கிராம பெண்களிடையே மிகவும் குறைவு.
ஒரு சென்டி மீட்டர் விட்ட கட்டி இருந்தாலே, கைகளுக்கு தென்படும். மார்பக சதையில் மாற்றம் தென்படும் போது, இதை உணரலாம். மற்ற சதைகளை விட, இது உறுதியாகவும், கடினமாகவும் காணப்படும். வலி இருக்கும். பின்னாளில், அந்த கட்டி மீது உள்ள தோல் நிறமிழக்கும்; தடிமனாகும். காம்பு உள்ளிழுக்கப்படும். காம்பிலிருந்து நீரோ, ரத்தமோ கசியும்.
மார்பகத்தில் கட்டி தோன்றினால், உடனடியாக டாக்டரிடம் காண்பிப்பது நல்லது. எந்த கட்டியுமே கேன்சர் தான் என கருதக் கூடாது. மாதவிடாய் காலங்களில், சிலருக்கு மார்பில் கட்டி தோன்றலாம். மாதவிடாய் துவங்கும் முன் பெரிதாக தோன்றும்; மாதவிடாய் நின்றதும் காணாமல் போகும். எனினும், எந்த கட்டியையும் அலட்சியப்படுத்தாமல், மருத்துவரிடம் காண்பிப்பது நல்லது.

மார்பகப் புற்றுநோய், பெண்களுக்கு மட்டுமல்ல, ஆண்களுக்கும் வரும்; எந்த வயதிலும் வரும். “வயதானவர்களின் நோய் இது’ என்று கருதி, அலட்சியப்படுத்த வேண்டாம். மார்பில் கட்டி இருந்தால், “அல்ட்ரா சவுண்டு ஸ்கேன்’ செய்து, எந்த வகையான கட்டி என டாக்டர்கள் கண்டறிவர். எந்த இடத்தில் கட்டியுள்ளது என்பதை, இந்த “ஸ்கேனர்’ கண்டுபிடிக்கும். மெல்லிய ஊசியின் மூலம் கட்டியிலுள்ள செல்கள் மற்றும் திரவங்கள் எடுக்கப்பட்டு, “பயாப்சி’ பரிசோதனை செய்யப்படும். கேன்சர் நோய் இருந்தால், தெரிந்து விடும். சாதாரண கட்டியாக இருந்தாலும், இப்பரிசோதனை மூலம் அறிந்து கொள்ளலாம்.

சிலருக்கு இது, வெறும் நீர் கட்டியாகவும் இருக்கலாம். அப்படி இருந்தால், மெல்லிய ஊசி மூலம், அந்த திரவத்தை வெளியில் எடுத்ததும், கட்டி காணாமல் போய்விடும். கட்டி, திண்ணமாக இருந்தால், “மேமோகிராம்’ செய்ய வேண்டும்.சிலருக்கு மட்டும் மார்பக புற்றுநோய் ஏன் வருகிறது? இதற்கு சரியான காரணம் தெரியவில்லை. சுற்றுச்சூழல் மற்றும் பரம்பரை காரணங்கள், இந்நோய் வருவதற்கான வாய்ப்புகளை அதிகரிக்கின்றன.

அவை:

* பன்னிரெண்டு வயதுக்குள்ளாகவே பருவம் எய்தி, 50 வயதுக்கும் மேலாக மாதவிடாய் ஏற்படுவது.

* ரத்த சம்பந்த உறவினர்களில் யாருக்காவது, மார்பகம் அல்லது கருப்பை வாய் புற்றுநோய் இருப்பது. இந்த வகையில், பி.ஆர்.ஏ.சி., 1, 2 மற்றும் 3 ஆகிய மரபணுக்கள் புற்றுநோய் ஏற்பட காரணமாக அமைகின்றன என்று, கண்டறியப்பட்டுள்ளது.

* கதிரியக்கத்தால் பாதிக்கப்படுவது.

* பத்து ஆண்டுகளுக்கும் மேலாக, கருத்தடை மாத்திரை சாப்பிடுவது அல்லது, மெனோபாஸ் பிரச்னைக் காக, “ஹார்மோன் ரீப்ளேஸ்மென்ட்’ சிகிச்சையை நான்கு ஆண்டுகளுக்கும் மேலாக எடுத்து கொள்வது.

* அதிக வயதுக்கு பின் மகப்பேறு அடைவது, அதை தொடர்ந்து ஓராண்டுக்கு தாய்ப்பால் கொடுக்காமை.

* அதிக உடல் பருமன்.

* மது அருந்துவது, அளவுக்கு அதிகமாக டீ, காபி, காற்றூட்டப்பட்ட குளிர்பானங்கள் அருந்துவது, புகை பிடிப்பது.

சுய பரிசோதனை மூலம், துவக்கநிலை மார்பகப் புற்றுநோயை கண்டறியலாம். இந்த பரிசோதனை மிக எளிதானது. இந்த பரிசோதனையில், ஐந்து நிலைகள் உள்ளன. ஒவ்வொரு மாதமும், ஒரே நாளில் இந்த பரிசோதனை மேற்கொண்டால், ஹார்மோன் மாற்றங்களால் உண்டாகும், குழப்பங்களை தவிர்க்கலாம்.

நிலை 1: கண்ணாடி முன் நின்று, கைகளை இடுப்பில் வைத்து கொண்டு, மார்பகங்களை உற்று நோக்குங்கள். மார்பகத்தின் அளவு, தோற்றம், நிறம் ஆகியவற்றில் ஏதாவது மாற்றம் தென்படுகிறதா என்பதை கண்காணியுங்கள். வீக்கம் இருக்கிறதா என்பதையும் கவனியுங்கள். மார்பகத்தில் குழி விழுதல், தோல் திடீரென சுருங்குதல், தோலில் திடீர் தடிமன் ஏற்படுதல், சிவப்பாகி போதல், உலர்ந்து போதல், வீக்கம், காயம் ஏற்பட்டது போன்ற தழும்பு, காம்பு இடம் பெயர்தல் ஆகியவற்றை கண்காணிப்பது.

நிலை 2: கைகளை மேலே உயர்த்தி, மேலே குறிப்பிட்டுள்ள அறிகுறிகள் தென்படுகிறதா என்று கண்காணித்தல்.

நிலை 3: காம்பை அழுத்தி பார்த்து, அதில் கசிவு ஏதும் ஏற்படுகிறதா என்பதை கண்காணித்தல்.

நிலை 4: இடதுபுறமாக படுத்து, வலது கையால், இடது மார்பகத்தின் அனைத்து பகுதியையும் மெலிதாக அழுத்தி, கட்டி ஏதும் தென்படுகிறதா, வலி இருக்கிறதா என்பதை பரிசோதிக்கவும். அதேபோல், வலது பக்கமாக படுத்து, இடது கையால், வலது மார்பகத்தை பரிசோதித்தல்.

நிலை 5: நிலை 4ல் குறிப்பிடப்பட்ட பரிசோதனையை, நின்ற நிலையிலும், அமர்ந்த நிலையிலும் செய்து பார்த்தல்.
இந்த பரிசோதனைகளை அடிக்கடி செய்து பார்க்க வேண்டும்.
நாற்பத்தைந்து வயதானதுமே, இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை, “மேமோகிராம்’ செய்வது அவசியம். சிறிய கட்டிக்கு கூட, தகுந்த மருத்துவரிடம் காண்பித்து, சிகிச்சை பெற்றுக் கொள்ள வேண்டும்.
தினமும் ஒரு மணி நேரம் ஓட்டப் பயிற்சி, நடைபயிற்சி, சைக்கிள் ஓட்டுவது, நீச்சல் ஆகியவற்றில், ஏதாவது ஒன்றை மேற்கொண்டால், உடல் ஆரோக்கியமாக இருக்கும். கேன்சர் வராமல் பாதுகாக்க முடியும்.

துவக்க நிலை கேன்சரை சிகிச்சை மூலம், சரி செய்து விடலாம். முற்றிலும் குணமடைந்து, நீண்ட நாள் உயிர் வாழலாம்.

2 comments on “பெண்கள் மார்பகத்தில் கட்டி இருப்பதை கண்டறியும் முறை

  1. Ram சொல்கிறார்:

    நல்ல அறிவுள்ள பதிவு. நன்றி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s