தமிழ் சமூகக் கதைப் பாடல்கள்

சமூகக் கதைப் பாடல்கள் –

குலதெய்வ கதைகள் போல சில கதைகள் மக்களிடம் என்றும் சிறப்பு வாய்ந்தவையாக இருக்கின்றன. அந்த கதைகள் பாடல்கள் வழியாக பலதலைமுறைகளை கடந்து வந்திருக்கின்றன. தங்கள் சந்ததியினர் அந்தக் கதைகளை அறிந்து கொள்ள வேண்டும் என நம்முன்னோர்கள் விரும்பியிருக்க வேண்டும். அவைகளை சமூகக் கதைப் பாடல்கள் என அறிஞர்கள் கூறுகிறார்கள்.

சிறந்த பத்து கதைகள் –

வாய்மொழி கதைப் பாடல்களாக இருந்தவைகளை ஆவணம் செய்து விட பல தன்னார்வ தொண்டர்கள் ஆர்வம் காட்டிக்கொண்டிருக்கின்றார்கள். அந்த கதைகளுள் சிறந்த பத்து கதைகள் இங்கே.

1) நல்லதங்காள் கதை
2) முத்துப்பட்டன் கதை
3) சின்ன நாடான் கதை
4) சின்னத்தம்பி கதை
5) மம்பட்டியான் கதை
6) வெங்கலராசன் கதை
7) கௌதல மாடன் கதை
8) மதுரை வீரன் கதை
9) காத்தவராயன் கதை
10) கள்ளழகர் கதை

கதைகளின் கருத்து –

பேராசிரியர் நா.வானமாமலை என்பவர் இந்தக் கதைகளை ஐந்து வகையாக பிரிக்கின்றார். அவர் சொல்லும் விதத்தில் சமூகத்தின் அடிப்படை தவறுகளை சுட்டிகாட்ட மக்கள் இந்தக் கதைகளை கையாண்டதை நம்மால் தெரிந்து கொள்ள இயலும்.

1) கலப்பு மணமும் அவற்றின் துன்பியல் விளைவுகளும்.
(முத்துப்பட்டன் கதை, மதுரை வீரன் கதை, சின்னநாடான்
கதை) .

2) சாதிய அடக்குமுறையும் தாழ்த்தப்பட்ட சாதியைச் சார்ந்த
நாட்டார்களுக்கு உயர்சாதி மக்களால் விளைவிக்கப்படும்
கொடுமைகளும் (சின்னத் தம்பி கதை) .

3) தாய்வழி, தந்தைவழிச் சமூகக் குழுவினருக்கிடையே
தாய்வழியினர் தந்தை வழியினரிடம் மணஉறவு தேடும்
பொழுது ஏற்படும் சண்டைகள் – (தோட்டுக்காரி அம்மன்
கதை, வெங்கலராசன் கதை) .

4) பெண்களுக்குச் சொத்துரிமை மறுக்கப்படுதலும் அவற்றின்
துன்பியல் விளைவுகளும் – (நல்லதங்காள் கதை) .

5) சாதி சமயக் கட்டுப்பாடுகளைக் கடந்த மனிதாபிமானம்
(கௌதல மாடன் கதை) .

நாட்டார்கள் என்றால் சாதியாக கருதவேண்டாம். குடிமக்கள் எனும் கருத்தில் அவ்வாறு கூறப்பட்டிருக்கின்றது.

காலம் –

இந்தக் கதைகளில் வருகின்ற சாதி அமைப்புகளை கருத்தில் கொள்ள வேண்டும். பின்பு சில கதைகளில் சொல்லப்பட்டிருக்கும் பஞ்சம். எல்லாவற்றையும் கவணித்து பார்க்கையில் கதைப் பாடல்களின் நிகழ்வுக் காலம் கி.பி. 16, 17, 18 ஆகிய நூற்றாண்டுகள் எனலாம். அதாவது தமிழ் பேசும் பகுதிகளில் பாளையக்காரர் ஆட்சி முதல் ஆங்கிலேய ஆட்சி உறுதிப்பட்டது வரையிலான காலப் பகுதி.

கதைப் பாடல்களுக்கும் குலதெய்வ வழிபாட்டிற்கும் நிறைய சம்மந்தம் இருக்கிறது. இதில் வரும் மதுரை வீரன் கதையை காணும் போது சிலருடைய குலதெய்வம் மதுரை வீரன் என நினைவிலே கொள்ள வேண்டும். இந்தக் கதையில் திருமலை நாயக்கர் என்றொரு பாத்திரம் வருவதால் அதன் காலம் கி.பி.17-ஆம் நூற்றாண்டாக இருக்கலாம் என்கின்றனர்.

கதை நாயகர்களின் காரணம் –

கி.பி.16,17,18-ஆம் நூற்றாண்டுகளில் தமிழ்பேசும் பகுதிகளைப் பல இனத்தினர் கொள்ளைக் காடாகப் பயன்படுத்தினர். நாயக்கர்கள், முசுலீம்கள், மராத்தியர், கன்னடியர், டச்சுக்காரர், போர்ச்சுகீசியர், ஆங்கிலேயர், பிரஞ்சுக்காரர் ஆகிய இனங்களின் கொள்ளை இடும் பகுதியாகத் தமிழகப் பகுதி இருந்தது. எங்கு நோக்கினும் களவு, கொள்ளை, லஞ்சம், வழிப்பறி ஆகியவை நடந்தன. பஞ்சமும் வாட்டியது. இவற்றால் அதிகம் பாதிக்கப் பட்டவர்கள் தமிழ்நாட்டின் தென்பகுதி மக்களே. அதிலும் அடிநிலை மக்களே அதிகம் பாதிக்கப்பட்டனர். இவர்களுக்குச் சமூகத்தில் நிரந்தர இடமும் இல்லை, பாதுகாப்பும் இல்லை.

சமூகத்தில் பாதுகாப்புத் தன்மை குறைந்த காலத்தில் இத்தகையபாத்திரங்கள் ஒருவேளை மக்களைக் கவர்ந்திழுத்திருக்கலாம். நிலவுடைமை வர்க்கம் இந்தச் சமூக மரபு மீறலாளர்களைக் கொன்று விடுகிறது. இத்தகைய சோக முடிவு இவர்களை மக்கள் கண்முன் நாயகர்களாக நிறுத்துகிறது. எனினும் இத்தகைய சோக முடிவு மட்டுமே சமூகக் கதைப்பாடல்களின் ஆக்கத்திற்குக் காரணமாக அமைந்துவிடவில்லை. இவர்களின் சமூக மரபு மீறல் சமூகப் பாதுகாப்பற்ற அடித்தட்டு மக்களைக் கவர்கின்றது. அன்னாரின் முணுமுணுப்புக் குரல்கள் மக்களை ஈர்க்கின்றன. எத்தனையோ பேர் கொல்லப்பட்டுச் சோக முடிவுக்குள்ளாகும் பொழுது இல்லாத பற்று, இவர்கள் சோக முடிவு அடையும் போது இவர்கள் மீது வருவதற்குக் காரணமே அந்த ஈர்ப்பாக இருக்கலாம். தம்மால் செய்ய இயலாத ஒன்றைச் செய்த இம்மரபு மீறலாளர்களை ஏற்றுக் கொள்ளும் மக்கள், இவர்களைக் கதைத் தலைவர்களாக்கிப் பாடல் வடிவில் உயர்த்திப் பிடிக்கின்றனர்.

அதிகம் நடந்த பகுதிகள் –

பேராசிரியர் வானமாமலை வகைப்படுத்தியுள்ள சிக்கலைக் கருவாகக் கொண்ட சமூகக் கதைப் பாடல்கள் தோன்றியதற்கான காரணம்,கி.பி.16,17,18-ஆம் நூற்றாண்டில் தமிழகத்தில் நிலவிய அரசியல், பொருளாதார, சமூகச் சீர்கேடுகளே ஆகும். தமிழகத்தின் தென்பகுதியான மதுரை, நெல்லை, இராமநாதபுரம் பகுதிகளிலேயே இச்சீர்கேடுகள் அதிகமாக நடைபெற்ற காரணத்தால் சமூகக் கதைப்பாடல்களும் இப்பகுதிகளிலேயே அதிக அளவில் தோன்றி மக்களிடையே பரவியுள்ளன எனலாம்.

கதைகளை எளிய வடிவில் மாற்றி எழுதிக் கொண்டிருக்கிறேன். விரைவில் நல்லதங்காள் கதை சகோதரனில் இடம் பெரும்.

2 comments on “தமிழ் சமூகக் கதைப் பாடல்கள்

 1. ஜோதிஜி சொல்கிறார்:

  நல்ல முயற்சி. தமிழர்களின் முந்தைய கால வரலாறு தான் என்ன? என்ற யோசித்துக்கொண்டு ஒவ்வொன்றாக பார்த்துக்கொண்டு படித்துக்கொண்டு வரும் போது இது போன்ற விசயங்களும் உள்ளது என்பதை படிக்கும் போது மகிழ்ச்சியாக இருக்கிறது.

  மிகைப்படுத்தாத நிகழ்வுகளை உங்கள் சிந்தனைகளை தொடராக எதிர்பார்க்கின்றேன்.

 2. ஜெகதீஸ்வரன் சொல்கிறார்:

  நன்றி!

  //மிகைப்படுத்தாத நிகழ்வுகளை உங்கள் சிந்தனைகளை தொடராக எதிர்பார்க்கின்றேன்.//

  முயல்கிறேன்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s