விக்கி விக்கி வந்த ஜெயமோகனுக்கு நன்றி

விக்கி விக்கி
எம்.ஜி.ஆரைப் பற்றிய சில கட்டுரைகளை விரிவு செய்ய வேண்டியிருந்ததால் நான் விக்கியிலேயே இரண்டு நாட்களாக சுற்றிக் கொண்டிருந்தேன். வேறு சில கட்டுரைகளிலும் பங்கெடுத்துக் கொண்டிருந்தேன். பாலின்ப இலக்கியம் என்ற கட்டுரைக்கு ஜெ தளத்திலுள்ள கம்பனும் காமமும் கட்டுரைக்கு இணைப்பு கொடுக்கலாம் என தெரிவித்திருந்தேன். புதுப்பக்கங்களை உருவாக்குவது, இணைப்பு தருவது என ஏகப்பட்டதை கற்றுக் கொண்டேன்.

இன்று ஜெயமோகன் என்ற புதுப்பயனர்ப் பக்கம் கண்டேன். நான் அங்கு ஜெவை எதிர்ப்பார்க்கவில்லை. சோடாபாட்டில் என்ற நபர் உண்மையில் எழுத்தாளர் ஜெயமோகனா பங்கேற்பது என்று தன் ஐயப்பாட்டினை தெரிவித்திருந்தார். அதற்கு ஜெ “ஜெயமோகனேதான். என் மின்னஞ்சலை பார்க்கலாமே. முன்பு பதிவுசெய்யாமல் இருந்தேன். இப்போது பதிவுசெய்து தகவல்களை அளிக்கிறேன். இலக்கியம் தொடர்பான தகவல்கள் இதில் இருக்கவேண்டும் என்பதற்காக இதைச் செய்கிறேன். என் இணையதளத்தில் உள்ள கட்டுரைகளில் இருந்து சிலவற்றை நான் வலையேற்றம் செய்கிறேன் -தகவல்கட்டுரைகளை. அவற்றுக்கு காப்புரிமை இல்லை. நீங்கள் செய்தாலும் சரி” என்று சொல்லியிருக்கிறார்.

வலைதளத்தில் வாசகர்களுக்காக எழுதிக்கொண்டிருந்தவர் இப்போது விக்கிப்பீடியா கலைக்களஞ்சியத்திலும் பங்கேற்க வந்திருக்கிறார்.

20 சிறுகதைகளை 300 ரூபாய்க்கு விற்கும் அளவிற்கு எழுத்துகளை விலைபோகும் காலக்கட்டத்தில், இத்தனை இயல்பாக வியாபார நோக்கில்லாமல் அவர் எழுதுவது வியப்பாக இருந்தது. அதை உங்களுடன் பகிர்ந்து கொண்டேன்.

ஜெயமோகனுக்கு நன்றி -

கிராமங்களின் தெய்வங்களை கதையை கவணிக்க நேர்ந்த போது ஏகப்பட்ட குழப்பங்கள் எனக்குள் எழுந்தன. நாட்டாரியல் களத்தில் மட்டுமல்ல, வயதிலும் நான் சிறியன் என்பதால் யாரை அனுகினால் விடை கிடைக்கும் என தேடியபோது, ஜெயமோகன் ஞாபகத்திற்கு வந்தார். காசுக்காக மட்டுமே எழுதும் எழுத்தாளர்கள் மத்தியில் வாசகர்களுக்காக எழுதுபவர் ஜெயமோகன். எனவே தயங்காமல் என் கேள்வியை அனுப்பினேன். அதற்கு அழகாக பதிலளித்து அவரது வலைதளத்திலேயே இட்டுவிட்டார். அதற்கு நன்றி கூட சொல்லாமல் இருந்தால் எப்படி. அதற்காகதான் இந்த இடுகை.

அன்பு ஜெ,

உங்களுடைய வலைப்பூவை வாசிக்கும் லட்சக்கணக்கானவர்களில் நானும் ஒருவன். எல்லா விசயங்களையும் நீங்கள் அனுகும் முறை மிக அழகாகவும் அறிவுப்பூர்வமாகவும் இருக்கிறது. அதனால்தான் நெடுங்காலமாக எனக்குள் இருந்த இந்தக் கேள்வியை உங்கள் முன் வைக்கிறேன். குல தெய்வங்களின் கதைகளால் ஈர்க்கப்பட்டு அவற்றின் கதைகளை சேகரிக்கத் தொடங்கினேன். பிச்சாயி, தொட்டியச்சி என பல கதைகள் கிடைத்தன அவர்கள் எல்லாம் சில நூற்றாண்டுகளுக்கு முன் வாழ்ந்த நம்மைப் போல மனிதர்கள் என அறிந்து பெரும் வியப்படைந்தேன். அந்த வரலாற்று இடங்களுக்கும் சென்று வந்தேன். மிகப் பெரிய அனுபவமாக அது இருந்தது. அந்தக் கதைகளில் ஒரு புறம் சைவமும் வைணவமும் ஆட்சி செய்கின்றன. (இதைப் பற்றி முன்பே நீங்கள் விளக்கம் அளித்துள்ளீர்கள்.). மறுபுறம் கதைகள் திரிக்கப்பட்டு பரப்பப்பட்டிருக்கின்றன. ஒரு சில கதைகளைத் தவிற மற்றவை மிகவும் மோசமாக கற்பனைகளால் மட்டுமே நிரப்பப் பட்டிருக்கின்றன. அவற்றை ஏதேனும் செய்து உண்மைக் கதையை கண்டறிய இயலுமா. மதுரைவீரன், சுடலை மாடன் என சில தெய்வங்களின் கதைகளில் மொத்த கதையையும் மாற்றாமல் ஒரு சில சம்பவங்கள் மட்டும் மாறுபட்ட கதைகள் வெவ்வேறுவிதமாக மக்களால் சொல்லப்படுகின்றன. இவற்றில் எந்த கதையை உண்மைக் கதையென நம்புவது என்பதே என்னுடைய கேள்வி. உங்களது விளக்கத்திற்காக காத்திருக்கிறேன்.

நன்றி,.

அன்புடன்,
ஜெகதீஸ்வரன்.

http://sagotharan.wordpress.com/

அன்புள்ள ஜெகதீசன்

குலதெய்வங்களைப்பற்றிய ஆய்வுகளை இரு கோணங்களில் செய்யலாம். சமூகவியல் கோணத்தில் அல்லது இறையியல் கோணத்தில்.

இரு தளங்களிலுமே அவற்றை ‘அப்படியே’எடுத்துக்க்கொள்ள முடியாது. அவை ஒரு குறிப்பிட்ட வகையான மொழிபுகள் [Narration] . தாங்கள் அறிந்த உண்மைகளை அம்மக்கள் ஒரு வகையான கதைகளாக ஆக்கி சொல்கிறார்கள். அக்கதைகளில் வரலாறு, தரிசனம் ஆகிய இரண்டும் புனைவாக ஆக்கப்பட்டுள்ளன. அந்த புனைவுக்கு ஒரு முறைமை உள்ளது. அந்த முறைமையை நாம் முதலில் கற்றுக்கொள்ளவேண்டும். அதன்பின்னரே நம்மால் நாட்டாரியலுக்குள் செல்ல முடியும்.

சமூகவியல் ஆய்வுக்கு விரிவான சமூகவியல் புரிதல் ஒன்று தேவை. அதாவது சமூகத்தின் கட்டுமனம், அதன் அமைப்பு முதலியவற்றை பற்றிய ஒரு பொதுமனவரைபடம் என அதை சொல்லலாம். அந்த வரைபடத்தினை நிரப்ப நாம் நாட்டார் பாடல்கள் மற்றும் கதைகளில் இருந்து தகவல்களை எடுத்துக்கொள்ளலாம்.

அதேபோல இறையியல் ஆய்வில் இந்த நாட்டார் கதைகளை தொன்மங்களாக, குறியீடுகளாகவே எடுத்துக்கொள்ளவேணாடும்

அதாவது அவற்றில் சமூகவியல் உண்மை, மதம்சார் உண்மை என பல தளங்கள் உள்ளன. நீங்கள் சமூகத்தையும் மதத்தையும் ஒட்டுமொத்தமாக ஆராயும்போது அவை உருவாக்கும் வினாக்களை ஒட்டியே இந்தக்கதைகளை பொருள்கொள்ள முடியும். அல்லாமல் இவற்றுக்குள் ஒரே ஒரு கதை அல்லது ஒரே ஒரு உண்மை மட்டும் ஒளிந்துகிடக்கவில்லை. அந்த உண்மையை இவற்றை மட்டும் ஆராய்ந்து கண்டுகொள்ள முடியாது.

உதாரணமாக பொன்னிறத்தாள் அம்மன் கதை. அது சமூகவியல் நோக்கில் அருங்கொலை செய்யப்பட்ட பெண், குறிப்பாக கர்ப்பிணிப்பெண், மீது அக்காலத்து மக்களுக்கு இருந்த குற்றவுணர்ச்சியையும் அச்சத்தையும் காட்டுகிறது. கொள்ளையடிக்கும் மறவர்கள் எத்தனை அஞ்சப்பட்டார்கள், வெறுக்கப்பட்டார்கள் என்பதைக் காட்டுகிறது. இபப்டி பல அர்த்தங்கள்

அதே கதை இறையியல் நோக்கில் மனிதர்கள் எப்படி தெய்வங்களாக ஆகிறார்கள் என்பதை காட்டுகிறது. அவர்கள் ஆவிகளாக ஆகிறார்கள். ஆவியாக இருக்கும்போது அவர்களிடம் உள்ள மன ஆற்றல் காரணமாக கடவுளை அடைந்து வரம்பெற்று தாங்களும் கடவுள்களாக ஆகிறார்கள். பெருந்தெய்வம் சிறு தெய்வத்தை உருவாக்குகிறது. இது ஒரு இறையியல் உண்மை.

இப்படி நாட்டாரியல் தரவுகளை நாம் நம்முடைய பார்வைக்கு எப்படி பயன்படுத்திக்கொள்கிறோம் என்பதே முக்கியமானதாகும்.

இந்த தளத்தில் நா.வானமாமலை, பக்தவ்த்சல பாரதி, முதல் அ.கா.பெருமாள் வரையிலானவர்கள் எழுதிய நூல்கள் உங்களுக்கு உதவும்

ஜெ

குறிப்பு =

விக்கிற்கு வந்த ஜெயமோகனுக்கு நன்றி என்றுதான் தலைப்பிட்டிருக்க வேண்டும். இது சும்மா!. பிறகு முக்கியமான விஷயம் வேலை கிடைத்துவிட்டது. இனி அடுத்தடுத்த திட்டங்களை செயல்படுத்த வேண்டியதுதான் மிச்சம்.

மிக்க நன்றி!.

மேலும் -

விக்கியில் என் பக்கம்
விக்கியில் என் பங்களிப்பு

ஐந்தாம் நாள் சென்னை புத்தக கண்காட்சி அனுபவங்கள்

5ம் நாள் -
விடுமுறை என்பதால், நண்பனும் வருவதாக கூறினான். மதிய உணவை முடித்துவிட்டு நண்பனோடு கண்காட்சிக்கு சென்றேன். பெயரே கேள்வியுறாத ஸ்டால்களில் புத்தகங்களை புரட்டி புரட்டிப் போட்டேன். மன நிறைவாய் ஒன்றும் அமையவில்லை. பாரதி புத்தகாலயத்தில் அரவாணிகளும் மனிதர்களே, சோசலிசமும், மதபீடங்களும் புத்தகங்களை தேர்ந்தெடுத்தேன். நக்கீரன் ஸ்டாலில் ஜெவை போட்டோசாப் செய்து போட்டிருந்தார்கள். நன்றாகவே இருந்தது.

ஞாநியையும், மனுஷ்ய புத்திரனையும் நண்பனுக்கு காட்டினேன். இருவரும் அவர்களுடைய அரங்குகளிலேயே இருந்தார்கள். சிலர் அவர்களிடம் புகைப்படம் எடுத்துக்கொள்ளவும், கையெழுத்து வாங்கவும் காத்திருந்தார்கள். என்.எச்.எம் அரங்கில் கூட்டம் வழிந்தோடியது, நம்முடைய ரசனைக்கு தக்கவாறு ஏதேனும் இருக்கிறதா என்று பார்த்தேன். ஒன்றும் கிடைக்கவில்லை. வேறொரு அரங்கில் ஒரு பெண் அளவுக்கு அதிகமான சத்தத்துடன் “நானே எம் புத்தகத்தை வாங்காம இருக்கேன்”, “இத பேஸ்புக்கில் போடப்போறேன்” என அருகில் உள்ளவரிடம் பேசிக் கொண்டிருந்தார். “மச்சி இது யாரு?” என்றான் நண்பன். “தெரியலேயப்பா” என்றேன் நான். (இந்த விஷயத்தை ஞாபகம் வைச்சுக்கோங்க, கடைசியில ஒரு மெசேஜ் இருக்கு!.)

விகடனின் புத்தகப் பட்டியலில் வ.உ.சி புத்தக்ததினை நேற்றே தேர்வு செய்திருந்தேன். அதனால் விகடன் அரங்கிற்கு சென்று வாங்கினேன். அரங்கு மிகவும் சிறியதாக இருந்தது. கூட்டமோ அதிகம். கண்ணதாசனின் அர்த்தமுள்ள இந்துமதம் 10 பாகங்கள் விலை குறைவாகவும், ஒரே புத்தகமாக இருப்பது அதிக விலையாகவும் இருப்பதாக கூறி வருத்தப்பட்டார் ஒருவர். சந்தியா பதிப்பகத்தின் தென்னிந்திய கிராம தெய்வங்களும் புத்தகம் சடங்குகளை விவரித்திருந்தது. அது மட்டுமே போதும் என முடிவெடுத்தேன். நண்பனுக்கு கொலையுதிர் காலத்தினை சிபாரிசு செய்தேன். (நானும் இன்னும் படிக்கலை, அதான்.) அதை வாங்கிவிட்டு கண்காட்சியை விட்டு வெளியே வந்தால், பாரதி பாஸ்கர் பேசிக் கொண்டிருந்தார்,பட்டிமன்ற ராசாவும் வந்திருந்தார்.

“வல்லமை தாராயோ” என்ற நூலுக்கான அறிமுக விழா அது. மக்கள் ராஜாவின் பேச்சுக்காக காத்திருந்தனர். கூட்டம் அதிகமாகவே இருந்தது. உடனே சாருவின் ஏழு புத்தகங்கள் வெளியீட்டு விழாவிற்கு கூட்டமே இல்லை ஜக்கி அவர்கள் எழுதியிருந்தது ஞாபகம் வந்தது. அடுத்த முறை புத்தக கண்காட்சியின் போது அவர்கள் நூல்களை வெளியிடலாம். நிச்சயம் வரவேற்பு அதிகமாக இருக்கும். ராஜா பேச்சில் விஷயமே இல்லையென்றாலும் சிரிக்க வைத்தார். குழந்தைகளை தோழில் தூக்கி வைத்திருக்கும் போது உச்சி மண்டை முடியை இழுப்பதை அழகாக சொன்னார். அம்மாக்களெல்லாம் சொல்லிறீங்க, அப்பாக்களுக்கு சொல்ல தெரியவில்லை என்றபோது, கரகோசம் வானை பிளந்தது. ராஜா பேசி முடித்ததும் கூட்டம் காலியானது, நாங்களும் கேன்டீன் வரை சென்று திரும்பினோம். அப்போது நிகழ்ச்சி முடிந்திருந்து பாரதி பாஸ்கரிடம் சிலர் ஆட்டோகிராப் வாங்கினர்.

ஆறு மணிக்கு வாலியின் தலைமையிலான கவியரங்கு தொடங்கியிருக்க வேண்டும். ஆனால் வெகு நேரமாகியும் தொடங்கவில்லை. பிறகு கூட்டத்தினுள் சலசலப்பு கேட்டது, வாலி கிழட்டு சிங்கம் போல, நடை தளர்ந்து வந்தார். வாலியின் இளைமைகால புகைப்படங்கள் கண்முன் தோன்றி மறைந்தன. வாரம்தோரும் வாலியில் வந்த கவிதையின் முன்னும் பின்னும் கொஞ்சம் சேர்த்து கவி படைத்தார். அதில் ஈழமும், 2ஜியும் அதிகமாக இடம் பிடித்திருந்தது.
“நேர்மையென்றால் நேற்றுவரை டாடா, இன்றோ டாடாவா” என்று அதிகம் 2ஜியை விமர்சித்தார் வாலி. நான் கொஞ்சம் கூட இதை எதிர்ப்பார்க்கவில்லை. கவிதையின் ஓரிடத்தில் உங்கள் குழந்தை ராஜாவாகட்டும் என்று சொல்லிவிட்டு, இது வேற ராஜா என்று சிரித்தார்.

முத்துலிங்கம் பேச்சில் இன்றைய அரசியல் அனல் அடித்தது. பணம் எனும் தலைப்பில் 2ஜியை தவிர்க்க முடியவில்லை. கூட்டத்திலிருந்து கிடைத்த கரகோசத்தினை கவனித்த வாலி மக்கள் நாம் ஒன்றை சொன்னால், அதை வேறொன்றுடன் ஒப்பிட்டு கைதட்டுகிறார்கள், இந்த மக்களால் தான் கவியரங்குக்கு வெற்றி, நம் கவிதையால் அல்ல என்று மகிழ்ந்தார். ராதாகிருஷ்ணனின் பேச்சில் அவருடைய வங்கி அனுபவம்தான் தெரிந்தது. பத்திரத்தினை பத்திரமாக வைத்துக் கொள்வதோடு, நிலத்தினையும் பத்திரமாக வைத்துக் கொள்ளுங்கள் என அடிக்கடி கூறினார்.

இளைய கம்பன் கடிதம் எனும் தலைப்பில் மிக அருமையாக பேசினார். இரண்டொரு இடங்களில் வாலி பாராட்டியதோடு, வாஞ்சையாக தடவியும் கொடுத்தார். நெல்லை ஜெயந்தா புத்தகம் பற்றி பேசினார். அரசியல் கலப்பு அதிகமில்லை. பழனிபாரதி கவிமழையில் வாக்குச் சீட்டு மாட்டிக் கொண்டது. பெரும்புள்ளிகளாக்கும், வெறும்புள்ளிகளாக்கும் கரும்புள்ளி நம் ஆள்காட்டி விரல் புள்ளி என்று பேசினார். இடையே தி.மு.காவின் வாக்கிற்கு பணம் கொடுப்பதையும் கடிந்தார். நந்தலாலாவுக்கு பத்திரிக்கைதான் தலைப்பு, பத்திரிக்கைகளின் மோசமான செயல்களை திட்டினார். தலையரங்கத்தில் மட்டும்தான் தலை இருக்கிறது, மற்ற இடங்களில் உறுப்புகள்தான் இருக்கிறது என ஆபாசத்தினை விதைக்கும் சிறுபத்திரிக்கைகளை வாரினார். முதலில் கருத்துகணிப்பு போல கவி சொன்னார், அதில் சாமியாரிடம் கேட்டேன், பத்திரிக்கையென்றால் அதிகம் பயப்படுகின்றவர்கள் இப்போது சாமியார்கள்தான். அதனால் அவர் கருத்து சொல்ல மறுத்துவிட்டார் என்றபோது, கரகோசம் பறந்தது. இறுதியில் ஈழத் தமிழர்களின் எலும்பில் பேனாவிற்கு கட்டை செய்து எழுதுவோம் என்று சொன்னதை வாலி பாராட்டினார். அடுத்து வாலி இன்னொரு கவிதை சொல்வார் என நினைக்கும் முன் கவியரங்கம் முடிந்தது என சொல்லிவிட்டார்.

இத்தனை அற்புதமாக கவியரங்கம் இருக்குமா என நண்பன் பாராட்டியபடியே வந்தான். நானும் அதன் அருமையை எதிர்ப்பார்க்கவே இல்லை. தொலைக்காட்சியில் போடுகின்ற கவியரங்கமெல்லாம், கருணாநிதியைப் பற்றியே நிகழ்கிறது, தமிழ் மாநாட்டிலும் இதுவே நிகழந்தது. ஆனால் வாலியின் தலைமையில் நிகழ்ந்த இந்த கவியரங்கத்தில்தான், 2ஜி, நிராடியா, ராஜா, நித்தியானந்தர் என அரசியலும், ஈழத்தின் மீதான கவிஞர்களின் உணர்வுகளும் பதிவு செய்யப்பட்டன. தி.மு.க ஆட்கள் தலைமையிடம் சொன்னால் அடுத்த முறை கண்காட்சி நடப்பதே கஷ்டம். கலைஞர் கொடுத்த ஒரு கோடி வைப்புநிதியில்தான் கண்காட்சி நடத்தும் பபாசி இயங்கிக் கொண்டிருக்கிறது. சாலையில் வந்து கொண்டிருந்தபோது, ஒரு பெண்மணி தொலைப்பேசியில் “அதுக்கென்ன அடுத்த தொகுதியாக போட்டுடலாம்” என்று பேசிவந்ததை கேட்டோம்., ஆகா சென்னையில் இருக்கிற எல்லோருமே எழுத்தாளர்களாகவும், பதிப்பகத்தரகளாகவும் இருப்பார்கள் போல! நாம ஜாக்கிரதையாகவே இருப்போம் என்று அமைதியாக வீடு திரும்பினோம். (இதுதான் அந்த மெசேஜ்!)

நான்காம் நாள் சென்னை புத்தக கண்காட்சி அனுபவங்கள்

சென்னை புத்தக கண்காட்சிக்கு வைரமுத்துவும், வாலியும் வரும் நான்கு மற்றும் ஐந்தாம் நாட்களே என் தேர்வாக இருந்தது. இப்போது இருவரின் பேச்சையும் நேரில் கேட்க வேண்டும் என் ஆசையும் பூர்த்தியாகிவிட்டது. நான்காம் நாள் கண்காட்சி அனுபவங்கள் இங்கே!.

வெள்ளிக் கிழமை என்பதால் கூட்டம் குறைவாகவே இருந்தது. பிரபல பதிப்பகங்கள், குழந்தைகளுக்கான பதிப்பகங்கள் தவிற மற்ற இடங்களில் காத்து வாங்கியது. மக்களின் ரசனைகள் மாறிக்கொண்டிருக்கின்றன என்பதற்கு சாட்சியாய் கலைஞரின் புத்தகங்களுக்கான இரண்டு அரங்குகளிலும் ஒருவர் கூட இல்லை. அதில் ஒரு அரங்கில் 20க்கும் மேல் புத்தகங்களே இல்லை. சட்டத் துறை நூல்களை கொண்ட இரண்டு அரங்குகள் கண்களில் பட்டன. அங்கே கைதானால் உங்கள் உரிமைகள் என்ன. தகவல் பெரும் உரிமைச் சட்டம் என இரண்டு புத்தகங்களை வாங்கினேன். இரண்டு ரூபாய் சில்லரை இல்லையென குட்டிப் புத்தகம் ஒன்றையும் தந்தார்கள்.

1000 ரூபாய் மதிப்புள்ள கீதை 120 ரூபாய் என விற்கப்பட்டது. எப்படிதான் கட்டுப்படி ஆகின்றதோ!. விகடன் 140 புத்தகங்களின் விலையை குறைத்து வெளியிட்டிருந்தது. விலைவாசி உயர்வுக்காக புத்தகங்களின் விலையும் கூட்டி விற்கும் பதிப்பகத்திற்கு மத்தியில் இப்படியும் ஒன்றா என்று வியப்பாக இருந்தது. அந்த பட்டியலில் இருந்த ஏடாகூட கதைகளை வாங்கிக் கொண்டேன்.

வைரமுத்து வரப்போகிறார் என்று மைக்கில் சொல்லிக் கொண்டிருந்தார்கள். நேரம் குறைவாக இருப்பதால் கிழக்கு பதிப்பகத்தின் பக்கம் செல்லாமல், உயிர்மை பதிப்பகத்திற்கு சென்று விட்டேன். அங்கே பாக்கெட் நாவல் சைசில் எஸ்.ரா மற்றும் சாருவின் புதிய புத்தகங்கள் இருந்தன. ஆனால் விலை 90 ரூபாய்,. எதை வாங்குவது என தெரியவில்லை. வலையில் விமர்சனங்கள் படித்துவிட்டு பொருமையாக வாங்கலாம் என திரும்பினேன். கையில் அருவாளோடு ஐயனார் வீற்றிருக்கும் தமிழ் மண்ணின் சாமிகள் புத்தகம் கண்களில் பட்டது. அதை எடுத்துக் கொண்டேன்.

கல்கியின் பொன்னியின் செல்வன் ஏறத்தாள எல்லா அரங்குகளிலும் இருந்தது. ஒவ்வொரு பதிப்பும் ஒவ்வொரு விலை. நாட்டுடமையாக்கப்பட்ட எழுத்துக்களுக்கு பஞ்சமேயில்லை. பிரபல அரங்குகளில் சுஜாதா நிறைந்திருந்தார். சில அரங்குகள் நாவல்களுக்காக மட்டுமே இருந்தன. இம்முறை அந்தப் பகுதிகளுக்கு செல்வதில்லை என முடிவெடுத்திருந்தேன்.

கண்காட்சிக்கு வெளியே வரும் போது, வரவேற்புரை நிகழ்ந்து கொண்டிருந்தது. வைரமுத்து, நக்கீரன் கோபால் என எல்லோரும் மேடையில் அமர்ந்திருந்தார்கள். அப்படியே கூட்டத்தோடு கூட்டமாக கலந்துவிட்டேன்.

சுவாரசியங்கள் –

ஞாநி அவருடைய அரங்கில் வாசகர்களோடு பேசிக் கொண்டிருந்தார். அவருடைய பாரதியின் ஓவியம் அவருடைய அரங்கு என்பதை சொல்லிக் கொண்டிருந்தது.

ஒரு அரங்கில் நாஞ்சில் இருந்தார். அவரிடம் ஒரு வாசகி நாவல்களைப் பற்றி பாராட்டிக் கொண்டிருந்தார். சில வரிகளை சுட்டிக் காட்டி அந்த வரிகள் தன்னை பாதித்தாக கூறினார். அவர்கள் வாசகர்களின் வழியை அடைத்துக் கொண்டு நின்றிருந்தமையால் நாஞ்சிலை அறியாத ஒருத்தர், தள்ளி நின்று பேசுங்கள் என்று கூறி சாதாரணமாக நடந்து போனார்.

ஒரு சிறுவன் கண்காட்சிக்குள் வர மாட்டேன் என அடம் பிடிக்க, அவன் தந்தை தூக்கிக் கொண்டு போனார். தாய் அவனை சமாதானம் செய்ய முயன்று கொண்டிருந்தாள்.

உயிர்மை அரங்கில் மனுஷ்யபுத்திரனை பார்த்தேன். சிலர் சாருவின் புத்தகங்களை எடுத்துக் கொண்டு வேகமாக ஓடினார்கள். என்னவென்று பார்த்தால் சாரு அமர்ந்திருந்தார். அவருடன் ஒரு பெண் பேசிக் கொண்டிருந்தார்.

வந்தார்கள் வென்றார்கள் புத்தகத்தினை சேர் செய்து வாங்கலாம் என ஒரு இளைஞன் தன் நண்பனிடம் கேட்டுக் கொண்டிருந்தான்.

பார்த்தீபனின் கிறுக்கல்கள் புத்தகத்தினை நிறைய பேர் பார்த்தார்கள். ஆனால் யாரும் வாங்கவில்லை. ஒருவன் சின்னக் கவிதையை தாளில் எழுதிக் கொண்டான். ஏன் என்று பார்த்தால் விலை 270.

சேத்துப்பட்டு ரயில் நிலையம் அருகேயிருக்கும் சிக்னலில் ஒரு திருடன் தாலிக் கொடியை பறித்துவிட்டதாகவும், அது தவறி எங்கோ விழுந்துவிட்டதை சிலர் தேடிக் கொண்டு இருந்தார்கள். கூட்டத்தில் எந்த பெண்மணியையும் பார்க்க முடியவில்லை. காவல்துறையினர் கூட்டத்தினை விரட்ட நமக்கென்ன என நானும் வந்துவிட்டேன்.

தமிழினத்தின் எச்சம் நீங்கள் – புத்தக திருவிழாவில் வைரமுத்து பேச்சு (காணொளியுடன்)

நேற்று 34வது சென்னை புத்தக கண்காட்சிக்கு சென்றிருந்தேன். வைரமுத்துவின் பேச்சை நேரில் கேட்கவே நேற்று சென்றேன். அதனால் புத்தக அரங்கில் சரியாக சுற்ற இயலவில்லை. இருந்தும் மனநிறைவாக வீடு திரும்பினேன். அந்த அனுபவம் பற்றிய இடுகை இது,.

நக்கீரன் உரை -
உரை அரங்கத்தில் நக்கீரன் கோபால் தலைமை தாங்கி பேசினார். அவருடைய பேச்சில் தடுமற்றங்கள் நிறைய இருந்தது. பிரதமரை வரவேற்காமல் வைரமுத்துவின் ஆயிரம் பாடல்கள் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட கலைஞரை பாராட்டினார். நகர வாழ்க்கையைப் பற்றி ஒரு கதை கூறினார் எல்லோரும் அதை ரசித்தார்கள். ஒரு திருடன் அந்த வீட்டில் எல்லாவற்றையும் திருடிவிட்டான். அப்போது அங்கே கட்டப்பட்டுக் கிடந்த பெண்மணி “எனக்காக ஒரு உதவி செய்யுங்கள். என் வீட்டில் திருடியது போல எதிர் வீட்டிலும் திருடி சென்றுவிடுங்கள். இல்லையென்றால் எப்படி திருடினான், எங்கே அடித்தான் என்றெல்லாம் கேட்டு உயிரை எடுத்துவிடுவார்கள்” என்றாள். அதைக் கேட்ட திருடன் அவளை ஓங்கி ஒரு அரை விட்டுவிட்டு, “நான் எதிரிவீட்டில் தான் திருட வந்தேன். அங்கு திருடிய பின் அவர்கள்தான் இங்கேயும் திருட சொன்னார்கள்.” என்று சொன்னானம்.

ஊரான் அடிகள் உரை -
அடுத்து ஊரான் அடிகள் என்ற வள்ளலார் தொண்டர் சங்க இலக்கிய காட்சியும் கருத்தும் என்பது பற்றி பேசினார். ஏற்கனவே தெரிந்திருந்த இரண்டு சங்க இலக்கிய பாடலுக்கு விளக்கம் அளித்தமையால் அவை என்னை கவரவில்லை. புத்தகம் என்பதற்கு நூல் என்ற பண்டையப் பெயர் எப்படி வந்தது என்று கூறினார். மரத்தினை சரியான அளவில் அறுப்பதற்கு சாயம் பூசிய நூலை இருமுனைகளில் இருந்தும் தட்டி, அந்த நேர் கோட்டில் அறுப்பார்களாலாம். அடுத்து பராய் மரத்தினை வெட்டுவதைக் கடினம் என்றும், அந்த பராய் மரத்தினை கொண்டே திருப்பராய்த்துறை என்ற பெயர் உருவானதாகவும் கூறி வைரமுத்து பேச இடம் தந்தார்.

வைரமுத்துவின் பேச்சு -
தொடக்கத்தில் எல்லோருக்கும் வணக்கம் கூறி மெதுவாக பேச ஆரமித்தார். அதன் பின் வேகம் கூடிக் கொண்டே சென்றது. அவர் தேமதுர தமிழோசை என்ற தலைப்பில் பேசினார். அதில் மூன்று விஷயங்கள் முக்கியமானது.

1. கோபத்திலும் அறத்தினை பேனியவர்கள் நம் தமிழர்கள் என்பதற்கு உதாரணமாக கண்ணகி மதுரை எரித்ததை குறிப்பிட்டது. கண்ணகி அந்தனன், அறவோன், பசு, மழலை என சிலரை தவிற மற்றவர்களை எரிக்க சொன்னதை வியப்பாக குறிப்பிட்டார்.

2. தமிழின் சிறப்பான விஷயமாக பூவிற்கு பெயரிட்டதை கூறினார். அரும்பு, மொட்டு, பூ என பெயரிட்டுவிட்டு விழுகின்ற பூவிற்கும் “வீ” என்று பெயர் இட்டிருக்கின்றார்கள் தமிழர்கள்.

3. என்.எஸ்.கிருஷ்ணனின் வாழ்வில் ஒரு நிகழ்வினை கூறினார். சங்க இலக்கிய பாடல்களில் வரும் சிலேடையை தமிழன் அன்றாட வாழ்வில் பயன்படுத்தியமை நினைவு கூறினார்.

நிறைய பேசினார். உங்கள் குழந்தைகளை இந்த கண்காட்சியில் தவழ விடுங்கள். வருங்கால சந்ததிகள் புத்தகத்தினை தொட்டுப் பார்த்து வளரட்டும் என்றார். இறுதியாக பத்திரிக்கைகள் தமிழில் பிழை இல்லாமல் இருக்க தமிழாசிரியர்களை ஒரு குழுவாக நியமிக்க வேண்டினார். அவருடைய பேச்சில் தலித் அரசியலும், நாத்திகமும் கலந்தே இருந்தது. அதை விட அதிகம் இருந்தது, தமிழை வளர்க்க வேண்டும் என்ற கோரிக்கையே!.

நான்கு பகுதிகளாக அவருடைய பேச்சினை பதிவு செய்தேன். இறுதி பகுதியை இணையத்தில் இணைக்க இயலவில்லை. அதனால் மூன்று பகுதிகளை மட்டும் தருகிறேன். மன்னித்துக் கொள்ளுங்கள்.

ஒரு ஜென்மம் போதாது

34 –வது சென்னை புத்தக கண்காட்சி இன்றையிலிருந்து 17ம் தேதி வரை சேத்துப்பட்டு புனித ஜார்ஜ் ஆங்கிலோ இந்தியன் மேல்நிலைப் பள்ளி மைதானத்தில் நடக்க இருக்கிறது. இனி வலையுலகில் கண்காட்சிக்கு சென்ற அனுபவம், வாங்கிய புத்தகம், விமர்சனம் என கலை கட்டும். சென்ற வருடம் தான் முதன்முதலாக புத்தக கண்காட்சிக்கு செல்லும் வாய்ப்பு கிட்டியது. இது எனக்கு இரண்டாவது கண்காட்சி. சென்ற கண்காட்சி எனக்கு சில பாடங்களை கற்றுக் கொடுத்துள்ளது. அதில் சிலவற்றை பகிர்ந்து கொள்கிறேன்.

பொதுவானவை -
சாண்டிலியன், கல்கி போன்றவர்களின் நாவல்களும், இரும்புக் கை மாயாவி போன்ற காமிஸ் புத்தகங்களும் எங்கிருக்கின்றன என்பதை தெரிந்து வைத்துக் கொள்வதில் இரண்டு நன்மை உண்டு.
1. அந்தப் பகுதியில் அதிக கூட்டம் இருக்கும் அதை தவிர்க்கலாம்.
2. நம்மிடம் இந்த புத்தகங்கள் எங்கே கிடைக்கும் என எதிர்ப்படுவர்களுக்கு உதவலாம்.

அடுத்து எல்லா புத்தகங்களுக்கும் 10 சதவீதம் தள்ளுபடி உண்டென்பதால், பட்ஜெட்டில் மிஞ்சுவதை வைத்து இன்னொரு புத்தகம் வாங்கலாம்.

புத்தகங்களின் பட்டியல் –
இந்த வருடம் ஒரு கோடி புத்தகங்கள் மக்களுக்காக வைக்கப்படுகின்றனவாம். இதில் நமக்கான புத்தகங்களை தேடுவதும், தேர்வு செய்வதும் பெரிய சவால்தான். கண்காட்சிக்கு செல்லும் முன்பே ஒரு குட்டிப் பட்டியல் தயாரித்துக் கொள்வதுதான் சிறந்த வழி. கேள்விப்படாத பல பதிப்பகங்களும், அறிவுக்கு எட்டாத பல புத்தகங்களும் அங்கு சென்ற பின்பே நமக்கு தெரியவரும். அதனால் இந்தப் பட்டியலை ஒரு உதவிக்காக மட்டுமே கொண்டு செல்ல தீர்மாணித்திருக்கிறேன்.

பிரபல பதிப்பகங்கள் –
விகடன், உயிர்மை, என்.எச்.எம் என சில பதிப்பகங்கள் பிரம்மாண்டமாய் இருக்கும். ஏற்கனவே நமக்கு அறிமுகமாகி இருப்பதால் நம் மனம் அங்கு செல்லவே முனையும். ஆனால் அங்கிருக்கும் பல புத்தகங்களை கண்காட்சி முடிந்தபின்பு கூட நம்மால் வாங்க முடியும். நம் தெருவில் இருக்கும் கடைகளில் கிடைக்கும் புத்தகங்களை கண்காட்சியில் வாங்குவது புத்திசாலிதனமாக இருக்காது. அதனால் இந்த வருடம் குட்டி குட்டி பதிப்பகங்களுக்கு சென்ற பின்தான் பிரபல பதிப்பகங்கள். இந்த சிறிய பதிப்பகங்களின் படைப்புகளை வெளியில் தேடுவது என்பது மிகவும் சிரமமான ஒன்று. மேலும் பிரபல பதிப்பகங்களின் புதிய புத்தகங்களை கண்காட்சியில் வாங்கலாம். அவை நம் பகுதி கடைக்கு வர நாளாகும்.

வைரமுத்துவா வாலியா –
கண்காட்சியில் நடக்கும் கலைநிகழ்ச்சிகளையும், அதில் கலந்து கொள்ளும் பிரபலங்களையும் சென்ற வருடத்தில் கவணிக்க தவறிவிட்டேன். எனவே இந்த வருடம் 7ம் தேதி வைரமுத்துவையோ, அல்லது 8ம் தேதி வாலியையோ பேசுவதை ரசித்துவிட வேண்டும். கண்காட்சிக்கு 2மணிக்கே சென்றால் புத்தகத்தினை வாங்கிய கையோடு 6மணிக்கு இவர்களை பார்க்க முடியும். இன்னும் சுகிசிவம், மனுஷ்ய புத்ரன் என நீங்கள் சந்திக்க ஆசைப்படுபவர்கள் வரும் நாட்களை அறிந்து கொள்ள இங்கு சொடுக்குங்கள்.

ஜெ, எஸ்.ரா, ஞாநி, சாரு எல்லோரும் கண்காட்சிக்கு வருவார்கள் என எதிர்ப்பார்க்கிறேன். எழுத்தாளர்களுக்கும் வாசகர்களுக்கும் இடையே இடைவெளி விரும்புகிறவன் நான். அதனால் அவர்கள் வந்தாலும் ஓரமாக நின்று பார்த்துவிட்டு வந்துவிடுவேன்.

பிரட்சனைகள் –

  • ஒரு லட்சம் சதுரடி, 650 அரங்குகள் என்று சொல்லியிருக்கின்றார்கள். எனவே வெகுநேரமாக நின்றும் நடந்தும் புத்தகத்தினை தேடுவதால், கால்கள் அசந்துவிடும். அமருவதற்கு ஆசனம் தேடினால் சில சமயம் கிடைக்காது.
  • புத்தகங்களை தனித்தனி பதிப்பகத்தில் வாங்குவதால் மொத்தமாக போட்டு வைத்துக் கொள்ள பை கிடைக்காது. கண்காட்சிக்கு செல்லும் போதே ஒரு பையை எடுத்துக் கொண்டு செல்வது நலம். இல்லையென்றால் புத்தகத்தோடு கை வலியும் உடன் வரும்.
  • தமிழகத்திற்கே உரித்தான கழிவரைப் பிரட்சனையையும், குடிநீர்ப் பிரட்சனையையும் எதிர்ப்பார்த்து செல்வது ஏமாற்றம் தராமல் இருக்கும்.
  • அன்னை, ஜக்கி, நித்தியானந்தா என சாமியார்களுக்கான அரங்குகளில் நுழையாமல் இருப்பது நல்லது. சென்ற முறை அன்னை அரங்கில் நுழைந்துவிட்டு பெரும் அவஸ்த்தை பெற்றுவிட்டேன்.
  • உங்களுக்கு கூட்டம் பிடிக்காது என்றால் விடுமுறை நாட்களில் செல்லாதீர்கள். என்னுடைய அனுபவத்தில் வேலை நாட்களின் 2மணியிருந்து 4 மணி வரை மட்டுமே சிறந்த நேரம். அதன்பிறகு கூட்டம் அதிகரித்துவிடும்.

குறிப்பு -
இந்த இடுகை புதியவர்களுக்கு மட்டுமே பலனளிக்கும் என தெரியும். நிறைய முறை கண்காட்சியை பார்த்தவர்களுக்கு இன்னும் பல சுவாரசியங்கள் தெரியலாம். அப்படி தெரிந்தால் பகிரவும். நன்றி.

சிலுவை – கொலையும் கலையும்

அனைவருக்கும் புத்தாண்டு நல்வாழ்த்துகள். சென்ற வருடத்தில் நடந்த முக்கிய நிகழ்வுகளை திரும்பி பார்க்க நம் தயாராக இருக்கிறோம். அதற்கு வருங்காலத்தினை நன்முறையில் அமைக்க முடியும் என்பதே காரணம். அதே சிந்தனையின் அடிப்படியில் இது வரை மனிதஇனம் நடந்தி வந்துள்ள சில விஷயங்களை ஒரு தொடராக தர உத்தேசித்திருக்கிறேன்.

கோவையில் பள்ளி குழந்தைகளை கடத்தி கொடூரமாக கொன்ற மோகன்ராஜ் கடந்த நவம்பர் மாதம் 9ம் தேதி என்கவுண்டரில் சுட்டுக்கொல்லப்பட்டார். அன்று தீபாவளிபோல பட்டாசுகள் வெடித்து கொண்டாடினார்கள் மக்கள். மோகன்ராஜ் என்கௌன்டர் சரியா தவறா என்றெல்லாம் பேசாமல் நாம் கவனமாக பார்க்க வேண்டியது மக்களின் மகிழ்ச்சியை. ஒருவனின் இறப்பை கொண்டாடவும், ரசிக்கவும் மக்கள் பல நூற்றாண்டுகளுக்கு முன்பே தயாராகி விட்டார்கள். இந்த ரசனையும், கொண்டாட்டமும் நாளுக்குநாள் தீவிரமாகிக் கொண்டே செல்கிறது. இந்த ரசனை நல்லதோ கெட்டதோ, அது அறிவியலை வளர்த்திருக்கிறது. அந்த அறிவியலைப் பற்றயதே இந்த கொலையும் கலையும்.

சிலுவை –
உலகிலேயே வேறெந்த கொலைக் கருவிக்கும் கிடைக்காத பெருமை சிலுவைக்கு கிடைத்துள்ளது. மிகப் பெரிய மதத்தினை குறிக்கின்ற சின்னமாக பார்க்கப்படுவதும், புனிதமாக கருதப்படுவதும் மிகவும் வியப்பானது. ஒரு குழந்தை கூட வரைந்துவிடும் அளவிற்கு மிக எளிமையாக இருப்பது அதன் இன்னொரு பெருமை. இத்தனை சிறப்புகள் இருந்தாலும் சிலுவையின் அறிவியல் விசித்திரமானது.

வடிவம் –

சிலுவை இரண்டு கோடுகள் 90° கோணத்தில் ஒன்றை ஒன்று வெட்டிக் கொள்ளவது போன்ற அமைப்பு. + குறி அதன் செங்குத்தான கோடு கீழ்புறமாக நீண்டது போல十 தோற்றமளிப்பது சிலுவையின் நிறைவான வடிவம். தண்டனைக்கான சிலுவையின் செங்குத்தான பகுதி 12 அடி உயரமானது. கிடைமட்ட பகுதி 6லிருந்து 8 அடிவரை இருக்கலாம். செங்குத்தான 12 அடியில் 4 அல்லது 3 அடி நிலத்தினுள் வைக்கப்படும். மிகவும் அதிகமாக சிலுவை தண்டனை நிறைவேற்ற செங்குத்தான பகுதி அப்படியே நிரந்தரமாக மண்ணில் புதைக்கப்பட்டு கிடைமட்ட பகுதி மட்டும் மாற்றப்பட்டுக் கொண்டிருக்கும். ரோம் நகரில் T வடிவத்தில் சிலுவை இருந்ததாக வரலாறு சொல்கிறது.

சிலுவையில் அறைதல்–
சிலுவையின் கிடைமட்ட பகுதியையும் தண்டனைக்கு உள்ளாகப்பட்ட கைதியின் கைகளையும் இணைக்க ஆணிகள் அடிக்கப்படும். சில சமயங்களில் கையிறுகளும் பயன்பட்டிருக்கின்றன. உள்ளங்கையில் ஆணி அடிக்கப்படுவதால் மனிதனின் முழு எடையையும் தாங்காமல் சில சமயங்களில் கைகள் பிய்த்துக் கொள்ள நேரிடலாம் என்பதால், மணிக்கட்டுக்கு அருகே எலும்பின் பிளவுகளிலும் ஆணி அடித்திருக்கின்றார்கள். சிலுவையின் செங்குத்தான பகுதியையும் கால்களையும் இணைக்க இரண்டு முறைகளை பயன்படுதியிருக்கின்றார்கள். ஒரு முறையில் கால்களை ஒன்றின் மீது மற்றொன்றை வைத்து ஆணி அடிப்பது. அடுத்தது சிலுவையின் பக்கவாட்டில் கால்களை வைத்து ஆணி அடிப்பது.


இப்படி சிலுவையையும் கைதியையும் முழுமையான இணைத்த பின்னர், சூரியன் உதிக்கும் திசையை நோக்கி நிறுவி விடுவார்கள். கைதிக்கு வெகுவிரைவில் களைப்பு ஏற்பட இம்முறை பயன்படுகிறது. சிலுவையை தெருநெடுகிலும் தூக்கிக் கொண்டு வர செய்வதும், சாட்டையால் அடிப்பதும் சோர்வினை விரைவில் தர செய்யும் செயல்கள். தண்டனைகளுக்காக அதிக கைதிகள் காத்திருக்கும் போது சிலுவை சுமக்க சொல்வது இல்லை. அதற்கு பதிலாக சிலுவையில் அறைப்பட்டபின் ஈட்டியால் காயம் ஏற்படுத்தினார்கள்.

மரணம் நிகலும் முறை –

உடலில் ஏற்படும் நீர்ப் பற்றாக்குறையும், ஆணிகள் மற்றும் ஈட்டியால் குத்தப்பட்ட இடங்களில் இருக்கும் வலியும் கைதிக்கு மிகவிரைவில் சோர்வை தருகின்றன. வெளியேருகின்ற ரத்தமும் தன் பங்கிற்கு சோர்வைதர, சிலுவையில் தொங்கும் நிலையை கைதியால் சமாளிக்க முடியாது. அது நுரையீரலை சரிவர இயங்க முடியாமல் செய்து மரணத்தினை நிகழ்விக்கிறது. சிலுவையில் அறையப்பட்டவர்களில் பெரும்பாலானோர் மூச்சடைப்பு ஏற்பட்டே இறந்திருக்க கூடும் என மருத்துவர்கள் கண்டறிந்துள்ளனர். சிலர் ரத்த சுழற்ச்சிக்கு போதுமான நீரின்றியும் இறந்திருக்கலாம் என்றும் சொல்லுகின்றனர். ரத்த சுழற்சி நடக்காது போது மாரடைப்பு நிகழும் வாய்ப்புகள் அதிகம்.

இன்று கோடிக்கணக்கான மக்கள் தெய்வமாக வழிபடும் ஏசு பிரான், ஒரு காலத்தில் இந்த துன்பங்களையெல்லாம் அடைந்து இறந்து போயிருக்கிறார். அந்த இறப்பினையும் சிலர் ரசித்து கொடுத்திருக்கின்றார்கள், அங்கிருக்கும் மக்கள் கொண்டாடியிருக்கின்றார்கள். எல்லா காலங்களிலும் தண்டனைகள் கொண்டாடும் மக்கள் இருந்திருக்கின்றார்கள், என்பதற்கு ஏசுவே சாட்சி. இரண்டு மரத்துண்டுகள் மூலம் மனிதனுக்கு கொடுத்திருக்கும் உடல்சார்ந்த வேதனையைக் கற்பனை செய்து பார்ப்பதே இயலாது. இது தொடக்கமே!. மனிதனின் ரத்த வெறி வரலாறெங்கும் தெறித்து இருக்கிறது.

ரத்தம் தெறிக்கும்!…

நன்றி -

http://en.wikipedia.org/wiki/Death_of_Jesus

http://ta.wikipedia.org/wiki/இயேசுவின்_சாவு

http://dsc.discovery.com/