வாசிப்பின் இடைவேளையில் சில வரிகள்

இந்த வருட புத்தக கண்காட்சிக்கு புத்தகங்களை தேர்வு செய்யும் போது, இலக்கியத்துவமான படைப்புகளை தேர்ந்தெடுத்தேன். அதில் குறிப்பிடத்தக்க ஒன்று நாஞ்சில் நாடனின் சூடிய பூ சூடற்க சிறுகதை தொகுப்பு. எண்ணற்ற சிபாரிசுகளும், சாகித்ய அகாதமி விருதும் இந்த புத்தகத்தினை தேர்வு செய்ய வைத்தன. நாஞ்சில் எழுத்துகளை முதன்முறையாக நான் படிக்கப்போகிறேன் என்ற ஆவல் இருந்ததே தவிற வேறு ஒன்றும் பெரியதாக தோன்றவில்லை. ஆனால் இந்தப் புத்தகம் என் வாசிப்பு அனுபவத்தை புரட்டி போடப் போகிறது என்பதை எண்ணிக் கூட பார்க்கவில்லை.

இப்போது நான்கு கதைகளை தான் படித்து முடித்திருக்கிறேன். அதற்குள் இதுதான் சிறுகதை என இதுநாள் வரை நான் நினைத்திருந்த பின்பத்தை உடைத்தெரிந்துவிட்டன இந்த சிறுகதைகள். இயல்பான காட்சியமைப்பு இறுதியாக ஒரு மாறுபட்ட முடிவு என குமுதம், குங்குமம் வாரப் புத்தகங்களில் ஒரு பக்கத்தில் வருவதையோ, சில பக்கங்களில் காட்சிகளை விளக்கி நீதி சொல்லும் நீதிநெறிக் கதைகளோ, பிரபல எழுத்தாளர்கள் எழுதிய கதைகளையோ வடிவத்தில் ஞாபகம் செய்யாமல் செல்லுகின்ற ஒவ்வொரு கதைகளையும் ரசித்து ரசித்து படித்தேன்.

இன்னும் படிக்க பதினொரு கதைகள் இருக்கின்றன என்பது, ஏதோ புதையலில் கிடைத்த தங்க காசுகளைப் போல மகிழ்ச்சியை தந்துகொண்டிருக்கிறது. ஒவ்வொரு கதையின் தொடக்கமும் மிகுந்த கவணத்தோடு காட்சிகளை விவரிக்கின்றன. அந்தக் காட்சிகள் மனகண் முன் விரிகையில் அது கதை என்பதை மறந்து போயி அதற்குள் புதைந்து விடுகிறேன். தாய்கிழவியின் கணிவோடு தான் சொல்ல வந்ததை மிகத் தெளிவாக அந்தக் கதை சொல்லிவிட்டு முடிந்துவிடுகிறது. அதன்பின் அந்தக் கதையின் மாந்தர்கள் அதன் நிகழ்விடங்களில் சிறுது நேரம் மனத்திற்குள் வாழ்கின்றார்கள். அவர்களை அப்படியே விட்டுவிட்டு மனம் வேறு காரியங்களில் நுழைய மறுத்து மௌனமாக இருக்கிறது.

ஏதேனும் ஒரு கனத்தில் நான் உணர்ந்தவைகளை எழுத்தின் வடிவில் பார்ப்பது, எனக்கும் அந்த கதைகளுக்குமான இடைவெளியை இல்லாமல் செய்துவிடுகின்றன. கதைகள் எனக்குள் ஏற்படுத்திய உணர்வுகளை உங்களுடன் பகிர்ந்து கொண்டேன். சிலருக்கு இது வெறும் பிதற்றலாக தோன்றலாம். சிலருக்கு வேடிக்கையாக கூட இருக்கலாம். வார்த்தைகளால் விவரிக்க முடியாது என கருதும் ஒரு மகிழ்வான கனத்தினை பகிர்ந்து கொண்டிருக்கிறேன்.

கல்கியின் பார்த்திபன் கனவிற்கு அடுத்து இப்போதுதான், பெரும் எதிர்பார்ப்புடன் ஒரு நாவலை படிக்க தொடங்கியிருக்கிறேன். அது ஜெயமோகனின் விஷ்ணுபுரம் நாவல். பார்த்திபன் கனவினை படிக்கும் போது, நான் பள்ளி செல்லும் மாணவன். மாலையில் கிடைக்கும் நேரத்தி்ல் எல்லாம் நாவல் என்னுடன் இருந்தது. குதிரையின் குளம்படி சத்தமும், வால்களில் ஓசையும், அந்தபுற ராணிகளின் குதுகல ஒலிகளும் மனகாதுகளில் ஒலித்துக் கொண்டே இருந்ததன. ராஜேஸ்குமார், சுபா என திரில் நாவல்களை படிக்கும் போது, அப்பா திட்டியிருக்கிறார். ஆனால் பார்த்திபன் கனவினை படிக்கும் போது ஒன்றும் சொல்லவில்லை. இந்த வாசி்ப்பு தளம் நோக்கி என்னை பயணப்பட வைத்தது அவர்தான் என நினைக்கிறேன். இதற்குதான் அவர் ஆசைப்பட்டிருக்கவும் கூடும்.

சரி விஷ்ணுபுரத்திற்கு வருவோம். வலைப்பூவில் ஜெயமோகன் அவர்களின் எழுத்துகளையும், சில கதைகளையும் படித்திருக்கிறேன். அவரை சிலர் இந்துத்துவாதி என குறிப்பிடுகின்றனர். எப்படி அமெரிக்காவில் கிருஸ்துவம் பற்றிய நிறைய படைப்புகள் வருகின்றனவோ, அதுபோல இங்கே இந்துமதம் பற்றிய படைப்புகள் வருகின்றன. அது வியாபார தந்திரமோ, சுற்றியிருக்கும் சமூகத்தின் காரணமாகவோ, இல்லை பெரும் காவியங்களின் பாதிப்போ எதுவென தெரியவில்லை. இந்து மதம் பிடிக்காத நடிகர்களை கூட வேலு, வேலாயுதம் என நடிக்கவைக்கும் காரணமும் அதுவாகத்தான் இருக்கும்.

இப்போதுதான் விஷ்ணுபுரத்திற்குள் நுழைந்திருக்கிறேன். பிரம்மாண்டமான கோவிலைக் கொண்ட விஷ்ணுபுரத்தில் விஷ்ணு படுத்திருப்பதைப் போல அங்கே ஒரு குஸ்டரோகியும் படுத்திருக்கிறான். அதைக் கண்டு ஒருவன் நிறைய சிந்தனை செய்கிறான். இல்லாத ஒரு கற்பனை நகரமன அதை எண்ணாமல், எங்கள் திருச்சி மாவட்டத்தின் திருவரங்கத்தினை மனதில் நிறுத்தி கதையை தொடர்ந்து கொண்டிருக்கிறேன். விஷ்ணுபுரமும், திருவரங்கமும் எனக்கு ஒன்றாகவே தோன்றுகின்றன. என் கற்பனையில் விஷ்ணுபுரம் திருவரங்கத்தின் பெரும் உருவகமாகவே தோன்றுகிறது. காற்றில் ஒலியெழுப்பும் தூண்கள், மிகப் பிரம்மாண்டமான கோபுரங்கள், விஷ்ணு படுத்திருக்கும் விதம் என எல்லாம் ஏற்கனவே அறிமுகமானவையாக இருப்பதால், இது புனைவு என்பதை அடிக்கடி மறந்து போகிறேன். தொடக்கமே அலாதியாக இருக்கிறது. இன்னும் சரியாக பத்து அத்தியாங்கள் கூட படிக்காமல் விஷ்ணுபுரம் பற்றி மேலும் கூற இயலாது. எல்லாம் படித்துவிட்டு வருகிறேன். என்னுடைய வாசிப்பு அனுபவம் போல நீங்களும் உணர்ந்திருந்தால் நிச்சயம் அந்த புத்தகம் பற்றி கருத்துரையில் மறக்காமல் குறிப்பிடுங்கள் நண்பர்களே.

குழந்தைகளை தத்து எடுப்பது பற்றி

ஒரு புறம் தேவைகள் இன்றி குவிந்து கிடக்கும். மறுபுறம் தேவைகள் இருந்தும் ஒன்று கூட இருக்காது. பெரும்பாலும் பணம் பற்றி கூறப்படும், இந்த வாசகம், ஏனோ எல்லாவளங்களுக்கும் பொருந்திப் போகிறது. “அந்த சனியன் இந்த தடவையும் பொண்ணையே பெத்து தொலைச்சுட்டா சார்” என்று சலித்துக் கொள்ளும் சுப்புவுக்கும், “போகாத இடமில்ல சார், அவ வயித்துல புழு கூட வைக்க மாட்டேங்கு”துன்னு ஏக்கமாய் சொல்லும் சுப்புவுக்கும் சுமையும், சுகமும் குழந்தைதான். “மேடுகளை உடைத்து பள்ளங்களை நிரப்புங்கள்” என்ற தத்துவ வார்த்தையின் மதிப்புமிக்க செயல்தான் “தத்து”. என் உறவினர் ஒருவர் தத்து எடுப்பதற்காக குழந்தையின் பெற்றோரிடம் வாய்மொழி அனுமதி பெற்று குழந்தையை வளர்த்து வந்தார், சில காலம் கழித்து அந்தக் குழந்தையின் தாய்க்கு குழந்தை திரும்ப பெறுகின்ற எண்ணம் வந்துவிட்டதால், தத்து எடுத்த குழந்தை மீண்டும் பெற்றோரையை அடைந்தது. பேச்சு வார்த்தை மூலமோ, பூஜைகளோ செய்து வி்ட்டு குழந்தைகளை தத்து எடுத்தல் இப்போதெல்லாம் செல்லாது என்பதை அவர் உணர்ந்தார். சட்டங்களை அறிவது பற்றிய கவணக்குறைவு எல்லாக் காலங்களிலும் நம்முடன் வருவது.

சட்டப்பூர்வமாக தத்து எடுப்பது பற்றியும், தத்து கொடுப்பது பற்றியும் அறிந்து கொள்ள இந்த புத்தக கண்காட்சியில் “குழந்தைகளை தத்து எடுப்பது பற்றி,..” என்ற புத்தகம் கிடைத்தது, அந்தப் புத்தகம் குறிப்பிட்டுள்ள முக்கிய விஷயங்கள் இனி,..

அரசு அனுமதி பெற்ற தத்து கொடுக்கும் அமைப்புகள் (Licenced Adoption/Placement agencies) மூலம்தான் தத்து பெறமுடியும். இவற்றை FIT person Institute என்று மத்திய அரசு அழைக்கிறது.

தத்து எடுப்பது தொடர்பான சட்டங்கள் -
1. Hindu Adoption and Maintenance Act(HAMA) – 1956 இந்துக்களுக்கானது.
2. Guardians and wards Act – 1890(GWA) மற்ற மதத்தினருக்கானது.

சில விதிமுறைகள் -

  1. குழந்தை தத்து எடுத்துக் கொள்ளப்பட சட்ட விதிகளின்படி தடையின்றி இருக்க வேண்டும்.
  2. குழந்தை 6-வயதிற்கு மேல் இருந்தால் வாய்மொழி மற்றும் எழுத்து மூலம் தத்து எடுத்துக் கொள்ளப்படுவதாக குழந்தை ஒப்புதல் அளிக்க வேண்டும்.
  3. உடன்பிறந்தோர் – இரட்டைக் குழந்தைகளைப் பிரிக்கக் கூடாது.
  4. தம்பதியருக்கு ஏற்கனவே குழந்தைகள் இருந்கதாலும் தத்து எடுக்கலாம்.
  5. ஒற்றைப் பெற்றோரும்(ஆண் / பெண் தத்து எடுக்கலாம்
  6. ஒரு ஆண், பெண்ணைத் தத்து எடுக்க விரும்பினாலும் அல்லது பெண், ஆணைத் தத்து எடுக்க விரும்பினாலும் தத்து எடுப்பவருக்கு குழந்தையை விட 21 வயது அதிகமாக இருக்க வேண்டும்.
  7. தாய் அல்லது தந்தை வயது 35-க்குள் இருப்பது நல்லது.
  8. குழந்தை தனது சொந்தப் பெற்றோரிடமிருந்து மொத்தமாகப் பிரிய வேண்டும். வயது வந்த பிறகு சொந்த பெற்றோரோடு சேர நினைத்தாலும் முடியாது.

திருமணம் ஆகாத ஆண், பெண், முறையான விகாரத்து பெற்றவர்கள் அல்லது வாழ்க்கைத் துணையை இழந்தவர்கள் தன்னிச்சையாக முடிவெடுக்கலாம். தத்து எடுத்துக் கொள்பவர்களுக்கு 18 வயதிற்கு மேலும் நல்ல மனநலத்துடனும் இருக்கவேண்டும். ஆனால் திருமணம் ஆனவர்கள் வாழ்க்கைத் துணைவர்/துணைவி சம்மதத்துடன் தத்து எடுக்கலாம். ஒன்றிக்கும் மேற்பட்ட வாழ்க்கை துணையிருந்தால் அனைவரின் சம்மதமும் அவசியம்.

பாரதி புத்தகாலயம் வெளியீட்டில் டாக்டர்.என்.கங்கா அவர்களால் எழுதப்பட்ட இப்புத்தகத்தில் இப்படி அறிந்து கொள்ள வேண்டிய முக்கிய செய்திகள் நிரம்ப இருக்கிறது. விலை 5 ரூபாய்.

35வது சென்னை புத்தக கண்காட்சி அனுபவங்கள்

சென்னை புத்தகாட்சிக்கான விளம்பரங்கள் வர ஆரமித்ததுமே ஏன்டா வேலை கிடைத்தது என இருந்தது. சென்ற வருடம் தினம் தினம் திருவிழாவிர்கு சென்று புத்தங்களோடு இருந்த மாதிரி இவ்வருடம் இருக்க முடியவில்லை. ஆனாலும் ஒரு ஆனந்தம் இம்முறை உழைப்பின் மூலம் கிடைத்த பணத்தினைக் கொண்டு புத்தகம் வாங்கியதுதான். ஞாயறு மட்டும் தான் எங்கள் அலுவலம் விடுமுறை. அன்று கண்காட்சிக்கு சென்றால் புத்தங்களை நெருங்கக் கூட முடியாது என்பதால், பொங்கலுக்கு ஊருக்கு செல்லும் முன் நாளை தேர்ந்தெடுத்தேன். இனி புத்தக திருவிழாவில் நான் தொலைந்து போனதைப் பற்றி,..

நேற்று (11.01.2012) அலுவகம் முடிந்து கண்காட்சிக்குள் நுழையவே 5.00 மணி ஆகியிருந்தது. இதற்கே அனுமதி வாங்கி அலுவலகம் முடியும் முன்பே கிளம்பியிருந்தேன். வழக்கமாக வாங்கும் புத்தகங்களை விடுத்து சில நல்ல இலக்கியங்களை தேடலாம் என சில நாட்களாக வலையில் எஸ்.ரா, ஜெயமோகன் சிபாரிசுகளை குறிப்பெடுத்திருந்தேன். அந்தப் பட்டியலோடு, புத்தக பதிப்பகங்களின் பெயர்களையும் எழுதிவைத்திருந்தேன். அந்தப் காகிதம் நம்பிக்கையை கொடுத்தது.

அரசியல்வாதிகளையும், நடிகர்களையும் மட்டுமே கொண்டாடும் மனிதர்களுக்கு மத்தியில் எழுத்தார்களை கொண்டாடும் வகையில் வழிநெடுகிலும் ப்ளாஸ்க் பேனர்கள் வரவேற்றன.சுஜாதா, ஜெயமோகன், எஸ்.ரா, சாரு, வைரமுத்து என பிரபல எழுத்தாளர்களு்ககு மத்தியில் புதியதாக சிலரும் இருந்தார்கள். அதிலும் குமுதத்தின் பேனர்களில் தமிழே தெரியாத சில நடிகைர்களும், நடிகைகளும் எங்களுக்கு பிடித்தது என சிலவற்றை சொல்லி வரவேற்றார்கள். தமிழனிடம் புத்தகம் வி்ற்க எந்தளவிற்கு நிறுவனங்கள் தரம் தாழ்ந்து நடந்து கொண்டிருக்கின்ற என்பதை பார்க்கும் போது வேதனையாக இருந்தது.

கண்காட்சியை முதலில் ஒரு முறை சுற்றிவந்தேன். கல்கியின் பொன்னியின் செல்வன் ஐந்து தொகுதிகளாகவும், ஒரே புத்தகமாகவும் பல்வேறு விலையில் விற்கின்றன. விகடன் பதிப்பகம் வெளியிட்டிருக்கின்ற பொன்னியின் செல்வன்தான் மிக அதிகமான விலையில் இருந்தது. வரலாற்று நாவல்களுக்கான வாசர்கள் எப்போதும் குறைவதேயில்லை. ரமணிசந்திரன், சாண்டல்யன், கல்கி என இப்போதும் எழுத்துகளில் வாழ்ந்து கொண்டிருப்பவர்களுடன் சுஜாதாவும் சேர்ந்துவிட்டார். பல ஸ்டால்களில் ஆன்மீகம் ஊற்றெடுத்து ஓடியது. மழைக்கு கூட மக்கள் ஒதுங்காத சில ஸ்டால்களும் இருந்ததை பார்க்கும் போது பகிரென்றது. இன்று எல்லாவற்றையும் விளம்பரங்களே தீர்மானிக்கின்ற என்ற உண்மையை அவர்கள் உணர்ந்திருந்தால், இந்நிலை வந்திருக்காது என நினைக்கிறேன். இஸ்லாமிய ஸ்டால் சென்ற முறை பெரியதாக இருந்தது, அங்கு வாங்கிய குரான் இன்னும் பத்திரமாக இருக்கிறது. ஆனால் ஸ்டால் இம்முறை சிறியதாகிவிட்டது. அலுவலகத்தில் உடன்பணிபுரிபவர் சிவ புராணம் புத்தகத்தினை ஹிந்தியில் வேண்டுமென கூறியிருந்தார், கீதா பதிப்பகம் என்பதில் இருப்பதாக கூறினார்கள். அவரை கைப்பேசியில் அழைத்து செய்தியை சொன்னேன்.

அப்படியே பிரபல பதிப்பகங்களின் ஸ்டால்களை குறித்துக் கொண்டேன். முதலில் பட்டியலிருந்த ஜெயமோகன் அவர்களின் விஷ்ணுபுரம் நாவலை வாங்கி எனது புத்தக வேட்டையை ஆரமித்தேன். உலோகம் நாவலுக்காக கிழக்கு பதிப்பகத்தினை தேடிக் கொண்டிருந்த நேரத்தில் சடசடவென மழை பொழிய துவங்கியது. வெளியிலிருந்தவர்கள் உள்ளே வந்ததால் கூட்டம் அதிகமானது. எனக்கோ புத்தகங்களை எப்படி வீட்டிற்கு கொண்டு செல்வோம் என்ற கவலை வந்தது. அதானால் மழை நிற்கும் வரை புத்தகங்களை வாங்கமலேயே சுற்றிக் கொண்டிருந்தேன். வ.உ.சி பதிப்பகத்தில் மழை நீர் மிக அதிகமாவே ஊற்றியது, பிளாஸ்க் பேனர்கள் கைக் கொடுத்தன. வழி தடத்தில் ஒழுகியதை யாரும் பொருட் படுத்தவில்லை. குழந்தைகளை தத்து எடுப்பது பற்றி,.. என்ற புத்தகம் பாரதி புத்தகாலயத்தில் கிடைத்து. பழைய மர பாலத்தில் ஒரு சம்பவமும் புத்தகத்தினை தேடினேன். கிடைக்கவில்லை. அருகிலிருந்த உதவியாளரிடம் கேட்டேன், சிறிது யோசித்துவிட்டு இல்லையென்றார்.

கைப்பேசி தொடையை கிள்ளியது, நண்பன் அழைத்திருந்தான், “மச்சி எங்கிருக்க?” “புத்தக கண்காட்சியிலதான்”. “அங்க செம மழையாமே. டி.வியில சொன்னாங்க.”, “அதுக்குள்ள டி.விவரைக்கும் செய்தி வந்துடுச்சான்னு” எங்கள் உரையாடல் தொடர்ந்தது. அதற்குள் மழை சுத்தமாக நின்றுவிட்டது. திரும்பி வராது என்ற நம்பிக்கையில் மீண்டும், வேட்டையை தொடர்ந்தேன். அறிவியல் வெளியீடு பதிப்பகத்தில் அறிவியல் புனைகதைகள், போரின் பிடியில் பிஞ்சகள் என இரண்டு புத்தங்களை எடுத்துக் கொண்டேன். நாஞ்சிலின் சூடிய பூ சூடற்க நாவல் ஒன்றே ஒன்று இருந்தது, அதுவும் மிகவும் மோசமான நிலையில் இருந்தது. அதை வாங்காமல் நடையை கட்டினேன். ஒரு பதிப்பக்ததில் எம்.ஜி.ஆர் நூல்களை அடுக்கி வைத்திருந்தார்கள், திருநாவுக்கரசு எழுதிடய புத்தத்தினை புரட்டினேன் ” கைது செய்யப்பட்ட சசிகலாவிற்காக அழுத ஜெயலலிதா” என்ற தலைப்பில் கட்டுரை ஒன்றும் இருந்தது. இன்றைய நிலைய நினைத்துக் கொண்டே இடம் பெயர்ந்தேன்.

தமிழனி பதிப்பகத்தில் காவல் கோட்டம் புத்தகம் ஏறாளமாக அடுக்கி வைக்கப்பட்டிருந்தது. கனத்தினை பார்த்து இறுதியாக எடுத்துக் கொள்ளலாம் என வைத்துவிட்டேன். எழுத்தாளர்களுடன் நேருக்கு நேர் நிகழ்ச்சியில் எழுத்தாளர் வெங்கடேசன் வந்திருப்பதாக ஒலிப்பெருக்கியில் கூறினார்கள். ஆவலோடு சென்றேன். பதினெந்துக்கும் குறைவான நற்காளிகளைப் போட்டு ஒரே ஒரு மைக்கினை கொடுத்திருந்தார்கள். வாசகர்கள் கேள்வி கேட்கவும், அவர் பதில் சொல்லவும் மாற்றி மாற்றி அதேயே பயண்படுத்த வேண்டியிருந்ததால் சிரமாக இருந்தது.

காவல் கோட்டம் பத்து வருட உழைப்பு என்பது, அதனை எழுத முடியாது என அவர் மூன்று முறை ஒத்தி வைத்தது என பல சுவாரசியங்கள். மலையாள தேசத்திலிருந்து வந்த ஒரு இளைஞர் தன்னுடைய மூதாதயர்கள் வாழ்ந்த ஊரினை தேடி வந்திருப்பதாகவும், அவர்கள் நாவலில் குறிப்படப்படும் அந்த புலம்பெயர்வில் மதுரையிலிருந்து வந்தவர்கள் என்பதையும் கூறினார். வியப்பாக இருந்தது. களவுக்கு ஆதாரவு தருகின்றீர்களா, குறிப்பிட்ட ஜாதியைப் பற்றி உயர்வாக எழுதியுள்ளீ்ர்களே, மதுரைக்கு எப்பவுமே நெகட்டிவ் கதைகளை களமாக கொள்ளப்படுகின்றதே என ஏகப்பட்ட கேள்விகள், ஏக்கங்கள். “பாண்டியர்கள், சோழர்கள்,.. என இப்படி இருக்கும் போது எப்போது தமிழன் என்ற பொதுப்பெயர் வந்தது” என்று ஒருவர் கேள்வி கேட்க,.. வெங்கடேசனை பார்க்கும் போது பாவமாக இருந்தது. ஒரு எழுத்தாளனுடனான சந்திப்பு இத்தனை சுவாரசியமாக இருக்கும் என அப்போதுதான் புரிந்தது.

ஜெயமோகனின் உலோகம் நாவலை வாங்க கிழக்கு பதிப்பகத்தில் நுழைந்தேன். ராஜேஸ்குமார் நாவலைப் போன்ற வடிவமைப்பில் உலோகம் இருந்தது. எஸ்.ராவின் உபபாண்டவத்தை வாங்கலாமா வேண்டாமா என்று யோசனை செய்து கொண்டே நடந்து வந்ததில் தமிழினி பதிப்பகம் மீண்டும் வந்தது. சரி இம்முறையாவது எஸ்.ராவை விட்டுவிடுவோம் என காவல் கோட்டத்தினை எடுத்துக் கொண்டு பணம் கட்டும் இடத்தில் நின்று கொண்டிருந்தேன். அதற்குள் என்.டி டிவியில் வந்த ஒரு நிருபர் பணம் பெறுபவரிடம் இங்கே இயக்குனர்களெல்லாம் எந்த புத்தகத்தினை அதிகம் வாங்குகிறார்கள் என்று கேட்க, “எனக்கு இயக்குனர்கள் யாரையும் தெரியாது” என கடுப்படித்தார் அவர். “இளைஞர்கள் எந்தப் புத்தகங்களை வாங்குகின்றார்கள் என மீண்டும் அவர் கேட்க, நான் கண்களை சுழலவிட்டேன். நாஞ்சில் விளம்பரத்தில் சிரித்துக் கொண்டிருந்தார், கீழே சூடிய பூ சூடற்க என்று எழுதியிருந்தது. காவல் கோட்டத்தை அவரிடமே விட்டுவிட்டி நாஞ்சிலின் புத்தகத்தினை தேடி எடுத்துக் கொண்டு பணம் பெறுபவரிடம் வந்தேன். இரண்டிற்கும் பணம் கொடுத்த போது புன்னகையோடு பெற்றுக் கொண்டார்,. உண்மையில் இவருக்கு சினிமா இயக்குனர்களை தெரியாது என்று மனம் சொல்லியது. இப்படியும் மனிதர்கள் இருக்கிறார்கள் என்பதை புத்தக கண்காட்சியில் கண்டால்தான் உண்டு.

இறுதியாக புத்தக பட்டியலை சரிபார்த்தேன்,. இரண்டு புத்தகங்கள் விடுபட்டிருந்தன். பூம்புகார் பதிப்பகத்தின் ஆயிரத்தியொரு அரேபிய இரவுகள் புத்தகமும், பாரதி புத்தகாலயத்தின் பழைய மர பாலத்தில் ஒரு சம்பவமும் கிடைக்கவில்லை. கோடிக்கண்ககான புத்தகங்களுக்கு மத்தியில் நின்று கொண்டு இரண்டு புத்தகளுக்காக அழுவது சரியாக தோன்றவில்லை. பாரதி புத்தகாலயமாவது கண்களில் தென்பட்டது, பூம்புகாரை பார்க்கவேயில்லை. அண்ணா நூலகத்தில் உள்ளதுபோல ஒரு கணினியில் புத்தகங்களின் தகவல்கள் இருந்தால் நன்றாக இருக்கும்.

கணினி மேஜிக்கா நாம் கண்டுகொள்ளாமல் விட்டவையா

இன்று ஒரு நண்பர், முகநூலில் மைக்ரோசாப்ட் கூட தீர்க்க முடியாத சில பிரட்சனைகள் என்று ஒரு பதிவினை இட்டிருந்தார். கல்லூரிக் காலங்களில் “மைக்ரோசாப்ட் மேஜிக்” என அறிவார்ந்த சில நண்பர்கள் கூறியதில் சிலவும் இருந்தது. அதனை ஒரு பிரதியெடுத்து உங்களுக்கு தருவதல்ல இந்த இடுகையின் நோக்கம். பிறகு வேறெதுக்கு என தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்.

மேஜிக் 1 -
உங்களின் விண்டோஸ் கணினியில் CON என்ற பெயரில் ஒரு ஃபோல்டரை உருவாக்க முயற்சி செய்யுங்கள். என்னதான் முயன்றாலும் அது முடியாது.

உண்மை காரணம்-
CON மட்டுமல்ல,.. PRN, AUX, CLOCK$, NUL
COM0, COM1, COM2, COM3, COM4, COM5, COM6, COM7, COM8, COM9
LPT0, LPT1, LPT2, LPT3, LPT4, LPT5, LPT6, LPT7, LPT8, and LPT9 என எந்த பெயரிலும் நம்மால் ஃபோல்டரை உருவாக்க முடியாது. காரணம், இவையெல்லாம் DOS மொழியில் இருக்கும் பிரத்தியோகமாக கருவிகளுக்காக உருவாக்கப்பட்டவை. இதே பெயரில் மற்றொன்று இருந்தால் வீண்குழப்பம் நேரிடும், இதை தவிர்க்கவே ஃபோல்டரை உருவாக்க முடிவதில்லை.

சிலர் அதற்கும் வழியை கண்டுபிடித்து வைத்திருக்கின்றார்கள்.

வழி 1 – புது ஃபோல்டரை உருவாக்கி அதன் பெயரினை CON என்று தட்டச்சு செய்தவுடன், alt கீயை அழுத்தியப்படி, 0160 என்று தட்டச்சு செய்தால் போதும்.

வழி 2 – @echo off
mkdir c:\con\ என்ற பேட்ச் பைலினை எழுதி இயக்கினால் கிடைத்துவிடும்.

வழி 3 – DOSஐ திறந்து MD \\.\C:\CON என்று தட்டச்சு செய்து என்டர் செய்தும் உருவாக்கிக் கொள்ளலாம்.

மேஜிக் 2 -
மைக்ரோசாப்ட் ஆபீஸ் வேர்ட் தொகுப்பினை திறந்து அதில் =rand (200,99) என தட்டச்சு செய்து என்டர் கீயை அழுத்துங்கள்.

உண்மை காரணம்-
On the Insert tab, the galleries include என்று தொடங்கும் பக்கம் பக்கமாக எழுதிய ஒரு கட்டுரை ஒன்று கிடைக்கும். சிலருக்கு “The quick brown fox jumps over the lazy dog” என்ற வரி திரும்ப திரும்ப கிடைக்கலாம், அப்போது நீங்கள் பயண்படுத்தும் தொகுப்பானது MS 2003 என அர்த்தம்.

இதற்கு நீங்கள் டம்மியாக கட்டுரையை தயார் செய்ய மைக்ரோசாப்ட் உதவுவதே காரணம்,. இதில் 200 என்பது பாராவின் அளவினையும், 99 என்பது அதில் உள்ள வரிகளின் அளவையும் குறிப்பன. நீங்கள் =rand (2,3) என்று முயன்றுப் பார்த்தால் புரியும். 200,99 என்பது அதிகப்படியான அளவு, அதற்கு மேல் அனுமதியில்லை.

மேஜிக் 3 -

உங்கள் நோட்பேடை திறந்து Bush hid the facts என தட்டச்சு செய்து சேவ் செய்து விடுங்கள். பிறகு நீங்கள் திறந்து பாருங்கள்.

உண்மை காரணம்-
ஒன்று நடக்காமல் அப்படியே Bush hid the facts என இருந்தால், உங்கள் கணினியில் IsTextUnicode என்ற Function சரியான பணியை செய்திருக்கின்றது என அர்த்தம். அப்படியில்லாமல் சைனிஸ் மொழியில் காண்பித்தால், சரியாக வேலை செய்யவில்லை. தற்போது வருகின்ற Windows XP, Windows Vista and Windows 7 ஆகியவற்றில் இந்தப் பிரட்சனை தவிர்க்கப்பட்டுள்ளது. நீங்கள் Bill fed the goats ஐயும் முயன்று பாருங்கள்.

பல ஆங்கில வலைதளங்களில் கூறப்பட்டிருக்கும் இவைகள் தமிழில் இருப்பது சில நண்பர்களுக்கு உதவும் என்று நினைக்கிறேன். உங்கள் கணினியில் உண்மையான மேஜிக் செய்ய விருப்பமா,..

நோட்பேடில் கீழே உள்ளதை வெட்டி ஒட்டி “magic.bat” என சேவ் செய்திடுங்கள். பின் அதனை சொடுக்கி பாருங்கள். மேலும் பலவற்றை அறிந்து கொள்ள இங்கு சொடுக்குங்கள்.

நன்றி -
விக்கி
Notepad Trick

ரஜினி – சிவாஜிராவ் இரண்டுக்கும் இடையில்

நேற்று அதிகாலை “திருச்சியெல்லாம் இறங்கு” என்ற கண்டெக்டரின் குரல் கேட்டு கண்களைக் கசக்கிக் கொண்டு எழ முயற்சித்தேன். அங்கு தென்பட்டதெல்லாம் ரஜினியின் பிறந்த நாளுக்காக தொண்டர்களால் வைக்கப்பட்டிருக்கும் பிளாஸ் வாழ்த்துகள். இதெல்லாம் ரஜினி என்ற சூப்பர் ஸ்டாருக்கு ரசிகர்களால் செய்யப்பட்டது, என்று கூறிவிட்டு சொல்லமுடியாது. ரசிகன் என்பதையும் மீறி விசுவாசியாக இருக்கின்றார்கள்.

மனுஷ்ய புத்திரன் அவர்கள் ரஜினியை “தோன்ற மறுத்த தெய்வம்” என்று குறிப்பிடுகிறார். தொண்டன் ஒரு படி கடவுளை நோக்கி ஏறினால், தெய்வம் நூறு படி இறங்கி வரும் என்பார்கள். ஆனால் ரஜினி விசயத்தில் இது தலைகீழாக நடக்கிறது. ரஜினியைப் பார்க்கும் போதெல்லாம் வியப்பு ஏற்படுவதற்கு பதில் ஒரு வித சோகம் தலையெடுப்பதை மறுப்பதற்கில்லை. அதற்கு காரணம், ரஜினிக்கும் சிவாஜிராவிற்கும் இடையே அவர் தனக்குள் நடத்திக் கொண்டிருக்கும் போராட்டம்.

நான் பள்ளியில் படித்த காலக் கட்டத்தில் ரஜினியும், கமலும் பழைய தலைமுறை நடிகர்களாக மாறிவிட்டிருந்தார்கள். இருந்தும் அவர்களைப் பற்றிய வாதங்கள் இன்று வரை எல்லோரிடமும் இருப்பது வியப்பானதுதான். ரஜினியை எம்.ஜி.ஆரோடும், கமலை சிவாஜியோடும் ஒப்பீடு செய்வது இயல்பானது, ஆனால், கமலின் பளிங்கு நிறமும், உடற்கட்டும், புதியமுயற்சிகளும் எம்.ஜியாரிடம் இருந்தவை. ரஜினியின் வில்லன் வேட திறனும், நகைச்சுவை உணர்வும் அப்படியே சிவாஜியிடம் இருந்தவை,.. இருந்தும் இந்த ஒப்பீடுகள் புறக்கணிக்ப்படுகின்றன. ஊடகங்கள் தங்களின் தேவைக்காக சிலரை மிகைப்படுத்தி பரப்பிவிட்டு காசுபார்க்க பயன்படுத்திக் கொள்ளும், அந்த விஷயத்தில் ரஜினியும் விதிவிலக்கல்ல.

ஒரு பக்கம் கோடிக்கணக்கான ரசிகர்கள், கோடிகளைத் தர தயாரக இருக்கும் தயாரிப்பாளர்கள், தலைக்காட்டினாலே போதும் என தவிக்கும் சக நடிகர்கள், பலருக்கும் வாய்க்காத அன்பான குடும்பம், ஆனால் இதையெல்லாம் விட்டு விட்டு ரஜினி தேடிக் கொண்டிருப்பதோ,… ஆன்மீக ஞானத்தினை. மற்ற நடிகர்களைப் போல இந்து மக்களைக் கவர நடத்தப்படும் நாடகமாக இது இல்லாமல், உண்மையாக இருப்பதை எல்லோரும் உணர்வார்கள். ரஜினியிடம் நான் மயங்கிப் போன இடம் அவரின் தனிப்பட்ட வாழ்க்கைதான்.

எம்.ஜி.ஆர், என்.டி.ஆர் போல ரசிகர்களை தொண்டர்களாக மாற்றியிருக்கலாம். கொஞ்சம் விட்டிருந்தால் ரசிகர்களே எம்,ஜி,ஆருக்கு செய்த்து போல ரஜினிக்கும் செய்திருப்பார்கள், ரஜினி தப்பிவிட்டார். அதில் எம்.ஜி.ஆரை மிஞ்சிவிட்டார். எம்.ஜி.ஆர் தன்னுடைய சொட்டை தலையை மக்களிடம் காட்டி தன் கதாநாயக பின்பத்தினை உடைத்துக் கொள்ள விரும்பவில்லை. விளைவு, கருப்பு கண்ணாடியோடு தொப்பியும் அவர் அடையாளமாக மாறிப் போனது. ரஜினி நினைத்திருந்தால் மறைத்திருக்க முடியும், கார்த்தி, விஜயகாந்த் போல விக் வைத்து அலைந்திருக்க முடியும். திரைக்கு முன் விக் வைத்துக் கொண்டு பேத்தி வயதில் இருப்பவரோடெல்லாம் டூயட் ஆடி, அரசியல்வாதிகளிடமிருந்தும், தீய சக்திகளிடமிருந்தும் மக்களை காப்பாற்றிவிட்டு, திரைக்குபின் ஆன்மீகத்தினை தேடி, ரசிகனிடமிருந்து ஓடி, அரசியலிருந்து தப்பித்து சிவாஜிராவாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்.

நம்மிடையே போலியாக வாழும் பலருக்கு மத்தியில் ரஜினியைப் போல சில மனிதர்கள் தங்கள் சுய அடையாளங்களை மீட்க தொடர்ந்து போராடிக் கொண்டிருக்கின்றார்கள். அவர்களுக்கு சமர்ப்பனமாக இந்த இடுகை இருக்கட்டும். நன்றி.

பால் ஊற்றெடுக்கா முலை!

அவள் காலையில் எழுகையில்
அவளோடு தலையணையில் உறங்கிய
அவள் பொம்மையும் விழித்தெழுகிறது!

அவள் ஆனந்தமாய் குளிக்கையில்
அதுவும் அருகிலேயே குளிக்கிறது!

அவள் ஒப்பனை செய்கையில்
அதுவும் ஓரளவு அழகாகிறது!

அவள் சொப்பு விளையாடுகையில்
அதுவும் சேர்ந்தே விளையாடுகிறது!

எல்லாம் முடிந்து,..
அவள்தன் தாய்மார்பில் பாலருந்துகையில்
அதுவும் பால்ஊற்றெடுக்காத
அவள்முலையில் பசியாருகிறது!

குழந்தைகளைப் பெற்றெடுக்கும் முன்பே
சில பெண் குழந்தைகள்
இப்படி தாயாகி விடுகின்றார்கள்!

- சகோதரன் ஜெகதீ்ஸ்வரன்.

சரோஜாதேவி முதல் சகுந்தலாதேவி வரை இனி இல்லை

“புத்தகங்களைத் திருடுங்கள். ஏனென்றால் புத்தகம் திருடுவது வெண்ணையைத் திருடுவதைவிடப் புனிதமானது” என்று சொன்னார் வலம்புரிஜான். பல மனிதர்களிடம் புத்தகங்கள் செய்திருக்கும் மாற்றங்கள் அலாதியானது. நிறைய மின்புத்தகங்களை வாசிக்க கிடைக்கையிலும், அச்சுப் புத்தகத்தினை புரட்டி படிப்பது அனைவருக்கும் விருப்பமான ஒன்று.

வான் முட்டி நிற்கும் விலைவாசியில், வயிற்றிக்கு செலவு செய்யவே விழிபிதுங்கி நிற்கும் நடுத்தர வர்க்கத்தினர். அறிவுப் பசிக்காய் அச்சு புத்தகங்களை வாங்கிப் படிப்பது இயலாத ஒன்றாகி விட்டது. ஆடி கழிவு போல வருடம் ஒரு முறை வந்து போகும் புத்தகச் சந்தை எதிர்நோக்கி என்னைப் போல எத்தனையோ பேர் காத்துக் கொண்டிருக்கிறோம்.

இதற்கு மத்தியில் அபூர்வமாய் சில இடங்களில் நூலகங்கள் உண்டு. அதிலும் அபூர்வமாய் சில இடங்களிலும் புத்தகங்களும் உண்டு. ஏனென்றால் நிறைய நூலகங்கள் பெயரளவில் மட்டுமே இருக்கின்றன. அப்படி பெயரளவில் இல்லாமல் கணக்கற்ற புத்தகங்களை தாங்கிக் கொண்டிருக்கும் நூலகங்களில் “அண்ணா நூற்றாண்டு நூலகமு”ம் ஒன்று. சைதைக்கு அருகே இருப்பதால் சில ஞாயிறுகள் நண்பர்களுடன் அங்கு சென்றிருக்கிறேன்.

இது போன்ற மிக நவீனமயமான நூலகத்தினை இதுவரை நான் கண்டதில்லை. ஆயிரம் புத்தகங்களை கொண்ட நூலத்தினை பார்த்தவனுக்கு ஆசியாவிலேயே பெரிய நூலகத்தினை பார்த்த போது எற்பட்ட மகிழ்ச்சியை உங்களால் அறிந்து கொள்ள முடியும். எங்கள் கிராமத்து நூலகத்தில் பெரும்பாலும் பொழுது போகாத பெருசுகளும், நாவல்களில் ஊறிப்போன சிறுசுகளை மட்டுமே காண முடியும். ஆனால் இங்கே ஏகப்பட்ட உழைக்கும் வர்கத்தினரைப் பார்க்க முடியும்.

கணினி முதற்கொண்டு வரலாறு வரை தனித்தனிப் பிரிவுகளாக ஏகப்பட்ட புத்தகங்கள். அதனைப் பயன்படுத்திக் கொள்ளும் மனிதர்கள் என்று கண்டாலும். என்னை வியக்க வைத்தது இங்கு வரும் குழந்தைகள்தான். திரைப்படங்களிலும், தொலைக்காட்சியிலும் தொலைந்து விடாமல் அறிவு வளர்க்க வரும் அந்த அடுத்த தலைமுறையை காணும் போது,.. இன்னும் படிப்பவர்கள் உருவாகிக் கொண்டிருக்கின்றார்கள் என்ற ஆனந்தம் ஏற்பட்டது.

கடந்த முறை சென்ற போது கூட உறுப்பினர் அட்டைக்காக அங்குள்ளவர்களை நாங்கள் அனுகினோம். விரைவில் அதற்கான ஏற்பாடுகள் முடிந்துவிடும் என நம்பிக்கையாக சொன்னார்கள். ஆனால் இன்று இடிபோல ஒரு செய்தி “சென்னை கோட்டூர்புரத்தில் கடந்த திமுக ஆட்சிக்காலத்தில் அமைக்கப்பட்ட, ஆசியாவிலேயே மிகப் பெரிய அண்ணா நூற்றாண்டு நூலகத்தை டிபிஐ வளாகத்திற்கு மாற்றப் போவதாக தமிழக முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்”.

வேடிக்கையாகவும் வேதனையாகவும் இருக்கிறது. கடந்த ஆட்சியில் கட்டப்பட்ட ஒரே காரணத்திற்காக நூலகத்தினை முடக்குவது எந்த நாட்டின் வரலாற்றிலும் நிகழ்ந்திருக்க முடியாத ஒன்று. நான் அறிந்த வரையில் ஹிட்லர் மட்டுமே நூலகத்தினை அழித்தாக கேள்வியுற்றிருக்கிறேன். ஆனாலும் என்னால் ஜெயலலிதாவை ஹிட்லருடன் கூட ஒப்பிட முடியவில்லை. ஏனென்றால் அவர் அழித்த நூலகம் “செக்ஸ்” பற்றியது என்று குறிப்புகள் கூறுகின்றன. எனவே ஜெயலலிதா இன்று ஹிட்லரையும் மிஞ்சிவிட்டார்.

முதல்வர் அதிகாரத்தில் இருக்கும் ஜெயலலிதாவின் இந்த அறிவில்லாத செயலுக்காக அவரை நடுத்தெருவில் நிற்க வைத்து செருப்பினால் அடித்தாலும் தகும் என்றே தோன்றுகிறது.
- புத்தகத்தினை நேசிக்கும் ஒரு மனிதன்.

நூலகத்தினைப் பற்றி மேலும் அறிய ,..

http://annanootrandunoolagam.blogspot.com

ஜோடியாக்(zodiac) – கொலையும் கலையும்

1960களிலின் இறுதியிலிருந்து 1970கள் வரை அமெரிக்காவின் கலிபோர்னியா, சான் பிரான்சிஸ்கோ மாகானத்தினை கதிகலங்க வைத்துக்கொண்டிருந்த பெயர் – ஜோடியாக்(zodiac). இது தொடர் கொலைகாரன் தனக்குத்தானே வைத்துக் கொண்ட பெயர். மக்கள் வைத்த பெயர் – ஜோடியாக் கில்லர். எத்தனையோ தொடர் கொலைகாரர்கள் இருக்கும் போது கொலையும் கலையும் தொடரில் ஏன் ஜோடியாக் பற்றி முதன்முதலாக சொல்கின்றேன் என்பதை,.. இந்த இடுகையை முழுமையாக படிக்கும் போது புரிந்து கொள்விர்கள்.

ஜோடியாக் கடிதங்கள் -

1961 வது வருடம் ஆகஸ்ட் ஒன்றாம் தேதி, Vallejo Times Herald, San Francisco Chronicle, The San Francisco Examiner என்ற மூன்று பெரிய செய்திதாள் நிறுவனங்களுக்கும் ஒரு கடிதம் வந்தது. அதில் மிக சமீபத்தில் நடந்தேரிய இரண்டு கொலை சம்பவங்களையும் தானே செய்ததாகவும், ஒவ்வொரு கொலையிலும் குண்டுகள் உபயோகித்தது முதல், இறந்தவர்களின் ஆடைகள் வரை விவரமாக எழுதப்பட்டிருந்தது. ஆனால் பெயருக்கு பதிலாக cipher எனப்படுகின்ற ஒருவகை மாற்றுமொழியில் எழுதப்பட்ட கடிதமும் இணைக்கப்பட்டிருந்தது. அதனை முதல் பக்கத்தில் வெளியிட வேண்டும் என்றும் தவறினால், மக்கள் கொல்லப்படுவார்கள் என்றும் எழுதப்பட்டிருந்தது.

ஒரு வழியாக அந்த cipherக்கான விடையை கண்டுபிடித்தார்கள். ஆனால் அதை படிக்கும் போது உறைந்து போனார்கள். அக் கடிதம் ” நான் மக்களை கொல்ல ஆசைப்படுகிறேன். ஏனென்றால் அது மிக்க மகிழ்ச்சியை கொடுக்கின்றது” என்று ஆரமிக்கப்பட்டிருந்தது. அதைப் படிக்க படிக்க கடிதத்தினை எழுதிய நபர் சாதாரண ஆள் அல்ல என்பதை புரிந்துகொண்டார்கள். பின் ஆகஸ்ட் 7, 1969ல் மீண்டும் ஒரு கடிதம் வந்தது. அதில் “This is the Zodiac speaking” என்று தனக்குதானே சூட்டிக் கொண்ட பெயரை முதல்முதலாக அந்த கொலையாளி பதிவு செய்திருந்தான். அத்துடன் முன்பு நடந்த மூன்று கொலைகளுக்கும் தானே பொறுப்பேற்று. அதன் அதிகமாக குறிப்புகளையும் கொடுத்திருந்தான். ஆனால் வேறு எந்த இடங்களிலும் உண்மையான பெயரினை அவன் பதிவு செய்யவே இல்லை என்பது அதனுடன் இணைக்கப் பட்டிருந்த இன்னொரு cipherன் புதிரை விடுவிக்கும் போதுதான் தெரிந்தது.

Berryessa சம்பவம் -

Berryessa ஏரிக்கருகே பிக்னிக் சென்றிருந்த ஜோடியை ஜோடியாக் செப்டம்பர் 27, 1969ல் தாக்கினான். உல்லாசமாக இருந்த ஜோடியை கட்டிபோட்டுவிட்டு, கைகளில் துப்பாக்கி இருந்தும் கத்தியால் குத்திக் கொன்றான். இந்த சம்பவத்தில் மூலம் அவனுடைய உருவம் தெரிந்துவிடக் கூடாது என்பதற்கா முகமூடி அணிந்திருந்தான். மார்பில் ஒரு குறியீடு இருந்தது. அது ஜோடியாக் என்ற கைகடிகார நிறுவனத்தின் குறி்யீடோடு ஒத்துப்போனது பின் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த இடத்திலிருந்து சுமார் 500 அடி தொலைவில் இங்கிருந்து திருடப்பட்டிருந்து கார் கதவில் “Sept 27 69 6:30 by knife” என்று குறிப்பிட்டுவிட்டு சென்றிருந்தான்.

தொடர் கொலைகளாலும், அதற்கடுத்து வரும் கடிதங்களாலும் நகரமே கதிகலங்கிப் போயிருந்தது. சான் பிரன்சிஸ்கோ காவல்துறை வரைபடமாக அவனின் உருவத்தினை வரைந்து வெளியிட்டது. இருப்பினும் தேடல்கள் ஓயவில்லை. இதற்கு மத்தியில் அக்டோபர் 11, 1969ல் மீண்டும் ஒரு கொலை நடந்தது. இந்த முறை ஜோடிகள் இல்லை, டாக்ஸி ஓட்டுனர் பலியாகியிருந்தார். பயணியாக டாக்ஸியில் ஏறிய கொலைகாரன். ஒரு தெருவில் ஓரமாக டாக்ஸியை நிறுத்த சொல்லி, பின்னால் அமர்ந்து கொண்டே தலையில் சுட்டிருக்கிறான்.

இந்தக்கொலை நடந்தபோது அதைக் கண்டவர்கள் கொடுத்த தகவலின் அடிப்படையில் இரண்டாவது வரைபடம் தயாரிக்கப்பட்டது. காவல் அதிகாரிகள் சந்தேகத்திற்கு இடமானவர்களை விசாரித்தனர். இரண்டு அதிகாரிகள் இந்த வழக்கிற்காக தனியாக நியமிக்கப்பட்டார்கள். அதன் பிறகும் கொலைகளும், கடிதங்களும் நிகழந்து கொண்டே இருந்தன. அவைகள் அனைத்தையும் விரிவாக கூறினால், கொஞ்சம் போர் அடிக்கும். எனவே அடுத்த விசயத்திற்கு செல்லுவோம்.

யார் ஜோடியாக் -

சான் பிரான்ஸிஸ்கோ காவல் அதிகாரிகள் நிறைய பேரை சந்தேகப்பட்டனர். அவர்களில் முக்கியமாக கருதப்பட்ட நபர்கள் மட்டும் ஏழு பேர்.

  1. Arthur Leigh Allen
  2. Bruce Davis
  3. Lawrence Kane
  4. Michael O’Hare
  5. Richard Marshall
  6. Ted Kaczynski
  7. Robert Hunter

இதில் Arthur Leigh Allen தான் ஜோடியாக் என கருதிய காவல்துறை செப்டம்பர் 27, 1974ல் கைது வாரண்ட் கொடுத்தது. மற்றவர்களை விட அதிக சாதகமான விசயங்கள் Allen னிடம் இருப்பதாக காவல்துறை கருதியதே காரணம். அதனை தவறு என்று சிலர் கருதினார்கள். Allenன் கைரேகை ஜோடியாக்கோடு ஒத்துப்போகவில்லை. ஆனால் காவல்துறை ஏற்கவில்லை. அதற்கு காவல்துறையிடம் இருந்த சில ஆதாரங்களே காரணம். உதாரணத்திற்கு ஒன்று நவம்பர் 9, 1969ல் வந்த கடிதத்தில் ஜோடியாக் தனது பேஸ்மென்டில் வெடிகுண்டு இருப்பதாக குறிப்பிட்டிருந்தான். பிப்ரவரி 1991ல் Allen வீட்டின் பேஸ்மென்டில் வெடிகுண்டுகளை காவல்துறை கைப்பற்றியது போன்றவை.

ஆனால் 2002ல் நடந்த DNA சோதனையில் Allenனுடைய DNA ஒத்துப்போகவில்லை. ஆனால் இந்த மகிழ்ச்சியை கொண்டாட Allen உயிரோடு இல்லை. அவர் ஆகஸ்ட் 26, 1992லேயே மரணமடைந்துவிட்டார். ஜோடியாக் cipher கடிதங்கள் சில தீர்க்கப்படாமலேயே இருப்பதைப் போல இந்த வழக்கும் தீர்க்கப்படாமல் இருக்கிறது.

இதன் பாதிப்பில் ஏகப்பட்ட நாவல்களும் ஐந்து திரைப்படங்களும் வந்துள்ளன. அவ்வளவு ஏன் டி.சர்டுகளில் ஜோடியாக் cipher பதிக்கப்பட்டு விற்பனை செய்யப்படுகின்றன என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன். வழக்கில் ஆர்வமிருந்தால் cipherக்கான விடையை கண்டுபிடித்து எப்.பி.ஐக்கு அனுப்புங்கள் நண்பகர்களே!…

நன்றி -
wikipedia

zodiackiller.com

கொலைகள் பலவிதம் ஒவ்வொன்றும் ஒருவிதம் – கொலையும் கலையும்

சமீபத்தில் வந்துள்ள மர்டர்-2 சக்கை போடு போட்டுக்கொண்டுப்பதாக அலுவலகத்தில் பேசிக் கொண்டார்கள். அது தொடர் கொலையை மையப்படுத்தி வந்துள்ள படம் என்பதை அறிந்தேன். கடந்த இரண்டு நாட்களாக வேலை சுமை குறைந்து போனதால், நெடுநாட்களுக்கு முன் “கொலையும் கலையும்”க்காக சேகரித்த தகவல்கள் ஞாபகத்திற்கு வந்தன. அதுவே இந்த இடுகைக்கு காரணம்.

தொடர் கொலைகளைப் பற்றியும், அதைச் செய்பவர்கள் பற்றியும் நமக்கு பல தகவல்கள் தெரியும். அன்றைய ஆட்டோ சங்கர் முதல் இன்றைய சைக்கோ மனிதன் வரை நம்முடனே நிறைய மனிதர்கள் அவர்களாக இருந்திருக்கின்றார்கள். கொலைகாரர்கள் என்றால் இவர்கள் மட்டுமா. இல்லை கொலைகள் இந்த விதத்தில் மட்டுமா நடந்துள்ளன. எல்லாவற்றைப் பற்றியும் சிறு பார்வை பார்த்துவிடுவோம்.

தற்கொலை -

எப்பொழுது மனிதனின் கடைசி நம்பிக்கை தகர்க்கப்படுகிறதோ அப்போது, நிகழும் பெரும் துயரம் இந்த தற்கொலை. பல தற்கொலைகள் துயரத்திலிருந்து தன்னை தற்காத்துகொள்ளும் கேடயமாக எண்ணி நிகழ்ந்தவை. சில மட்டும் வெறுப்பினால், மாறாதுயரத்தினால், தியாகத்தினால் நிகழ்ந்தவை. உண்ணாநோம்பால் உயிர் துறந்தாலும், பசியின் கொடுமை தாளாமல் உயிர் மாய்த்துக் கொண்டாலும் தற்கொலைதானே.

கொலை -

தன் உயிர் அல்லாமல் பிற உயிர்களை அழிக்கும் இந்த செயலில், வன்மமும், கொடூரமும் அதிகளவு கலந்திருக்கின்றன. தன்னை தற்காத்துக் கொள்ள செய்யும் கொலைகளிலிருந்து, பொழுதுபோக்கிற்காக செய்யும் கொலைகள் வரை ஆயிரமாயிரம் வகைகள் உள்ளன. சின்ன சின்ன கொலைகளையெல்லாம் விட்டு விட்டு கொஞ்சம் பெரிய கொலை அறிந்து கொள்ள செல்வோமானால், நிச்சயம் உடல் நடுங்கத்தான் செய்யும்.

தொடர் கொலை -
கோபத்தினாலோ, கொள்கைக்காகவோ, கொலை செய்யும் சுகத்திற்காகவோ, பணத்திற்காகவோ, பிறர் கவணத்தினை ஈர்ப்பதற்காகவோ இந்த தொடர் கொலைகள் நிகழ்ந்து கொண்டே இருக்கின்றன. பெரும்பாலும் ஒரே ஒரு மனிதனால் ஒன்றுக்கும் மேற்பட்ட மனிதர்கள் குறிப்பிட்ட காலத்திற்குள் அடுத்தடுத்து கொலை செய்யப்படுவதை தொடர் கொலைகள் என்கிறோம். இந்த தொடர் கொலைகளில் இருக்கும் பொதுத்தன்மை குறித்தே பல சந்தேகங்கள் இருந்தாலும், கொல்லப்படுகின்றவர்கள் ஒரே பாலினத்திலோ, ஒரே வேலை செய்பவராகவோ, ஒரே வயதுடையவராகவோ இல்லை ஏதாவது ஒரு வகையில் ஒற்றுமையுள்ளவர்களாகவே இருக்கின்றார்கள். இந்த கொலைகள் நடக்கும் காலத்தினை cooling-off period என FBI குறிப்பிடுகிறது.

அதிக மக்களை கொல்லுதல் -
மிகக் குறுகிய காலத்தில் அதிக மக்களை கொல்லும் முறை இது. இவை தனிமனிதன் மூலமாகவோ இல்லை ஒரு கும்பலினாலோ செய்யப்படுகிறது. மிக எளிமையாக சொல்வதென்றால் எப்போதும் இந்தியாவில் நிகழும் குண்டு வெடிப்புகள். சில சமயங்களில் தனியொரு மனிதனாலும் இவை நிகழ்கின்றன. வெளிநாடுகளில் படிக்கும் மாணவன், தன் கல்லூரியில் கண்ணில் படுபவர்களையெல்லாம் சுட்டு வீழ்த்திவிட்டு தானும் தற்கொலை செய்து கொண்டான் என்பதைப் போன்ற செய்திகள் உங்களுக்கு ஞாபகம் வரலாம். அவையெல்லாம் இந்த வகையினைச் சார்ந்தவையே.,

ராம்பேஜ் கில்லர்ஸ் என்று சிலரை குறிப்பிடுகின்றார்கள், இவர்களுக்கும் தொடர் கொலைகார்களுக்கும் உள்ள வித்தியாசம் அவர்கள் குறிப்பிடும் cooling-off period நேரம் மட்டுமே!… இப்படி பல வகையான கொலைகள் இருந்தாலும், தொடர் கொலைகளைப் பற்றியும், அதன் சுவாரசியான அறிவியல் முடிச்சுகள் பற்றியும் இனி வரும் இடுகைகளில் பார்க்க இருக்கிறோம். இது முன்னுரை மட்டுமே…

ரத்தம் தெறிக்கும்!…

அதிசயக்க வைத்த அஷ்டலட்சுமி கோவில்

கிராம தெய்வங்களுடன் கொண்ட அன்பால், பெரிய தெய்வங்களின் மீதான ஈர்ப்பு குறைந்துபோனது. இன்னும் சொல்லப்போனால், அவையெல்லாம் அந்நிய தெய்வங்களைப் போல காட்சியளிக்கின்றன. இருந்தும் சென்ற ஞாயிறு பெசன்ட் நகரிலுள்ள அஷ்டலட்சுமி கோவிலுக்கு நண்பனின் விருப்பத்திற்காக அவனுடன் சென்றேன். பல முறை ஏலியட்ஸ் கடற்கரைக்கு சென்றிருந்தாலும், அஷ்டலட்சுமி கோவில் அருகில் இருப்பதற்கான அறிகுறிகளை கண்டதேயில்லை. என்னுடைய கற்பனையில் அஷ்டலட்சுமிகள் ஒரு கருவரையில் இருப்பார்கள் என்றுதான் நினைத்திருந்தேன். ஆனால் அங்கு பெசன்ட் நகரை நெருங்கியதிலிருந்து எங்களுக்கு ஆச்சிரியங்கள் காத்துக்கொண்டே இருந்தன.

கோவிலின் அமைவிடத்தினை கூகுளில் கண்டிருந்தாலும் அங்கே மாதா கோவில் மட்டுமே தெரிந்தது. அந்த மதத்தினருக்கான பொருட்கள் வழிநெடுகிலும் இருந்தன. அவர்களிடம் அஷ்டலட்சுமி கோவிலுக்கான வழியை கேட்பசதில் கொஞ்சம் தயக்கமாக இருந்தது. பின் ஆட்டோ ஓட்டுனர் ஒருவரிடம் வழியை கேட்டு சென்றோம். மாதா கோவிலுக்கு அருகே செல்லும் சாலையில் செல்ல வேண்டியிருந்ததால், அங்கிருப்பவைகளை கண்களில் பட்டன. மெழுகுவர்த்திகள் ஏற்றும் இடத்தில், ஒரு யானை சிலை பக்தர்களை பார்த்துக்கொண்டிருந்தது. ஓரிடத்தில் மஞ்சள் தாலிகளும், தொட்டில்களும் கட்டப்பட்டிருந்தன. அங்கேயே பூட்டுகள் பலவும் இருந்தன. அண்ணா சாலையில் உள்ள தர்காவொன்றிலும் இந்த பூட்டு முறையை கண்டிருக்கிறேன். மாதாவிற்கு சேலை காணிக்கையாக செலுத்தும் இடம் என்று எழுதப்பட்டிருந்தது. மேரி எப்போது புடவை கட்டிக்கொள்ள பழகிக் கொண்டாளோ தெரியவில்லை. வெளிநாடு கோவில்களில் இருக்கும் நம் மாரியும் சுடிதார் போட்டுக் கொள்கின்றாளோ என்னவோ!. சரி இனி கோவில்,..

கோவிலின் முன்தோற்றம் - பழைய படம்

கோவிலின் முன்தோற்றம் - பழைய படம்

கடற்கரைக்கு அருகே, பிரம்மாண்டமாய் விரிந்திருக்கிறது கோவில். விடுமுறை தினம் என்பதால், மக்கள் சாரைசாரையாக நின்றிருந்தனர். இலவசம், ஒரு ரூபாய், நூறு ரூபாய் என பக்தர்களை தரம் பிரித்து கடவுள்கள் பார்த்துக் கொண்டிருந்தார்கள். காசு கொடுத்து கடவுளை பார்க்கும் அளவிற்கு நாங்கள் இன்னும் பொருளாதாரத்தில் உயரவில்லை என்பதால் நாங்கள் எப்போதும் போல இலவசத்திலேயே நின்று கொண்டோம். கொடிமரத்தின் அடிபாகம் விரிசல் விட்டிருந்தது. கோவில் புணரமைப்பு நிகழ்ந்துகொண்டிருந்ததால், அதையும் சீரமைப்பார்கள் என்றே நினைக்கிறேன். வரிசையில் ஊர்ந்து செல்லும் போது, அந்த பெரிய பலகை கண்களில் பட்டது. சற்று குறுகலான பாதை என்பதால், செல்ல இயலாதவர்கள் பின்னால் வருபவர்களுக்கு தொல்லை கொடுக்கவேண்டாம் என்ற ரீதியில் பயமுறுத்தியது. கருவரையை அடைந்துவி்ட்ட நிலையில் இதுவரை குறுகலான பாதையே இல்லையே எதற்காக வீணாக ஒரு பலகை என்று எண்ணினேன்.

முதல் மற்றும் இரண்டாவது கோபுர வரிசை

முதல் மற்றும் இரண்டாவது கோபுர வரிசை

கருவரை தரிசனம் முடித்து, எனக்கு முன்னால் சென்றவர்கள் படிகட்டுகளில் ஏறிக்கொண்டிருந்தார்கள். கோவில் கோபுரத்திற்கு எதற்கு ஏறுகின்றார்கள். வெளியே செல்ல அதுதான் வழியாக என நண்பனுடன் பேசிக்கொண்டே சென்றேன். முதன்முறையாக கோவிலின் கோபுரத்திற்குள் கருவரைகள் அமைக்கப்பட்டிருப்பதை அன்றுதான் கண்டேன். முதல் கோபுர வரிசையில், திசைக்கொன்றாக நான்கு லட்சுமிகள் இருந்தார்கள். இரண்டாவது வரிசையில் ஒரே ஒரு லட்சுமி மட்டும் இருக்கிறார். அடுத்ததாக கீழ் வரிசையில் மூலவர்தவிர்த்து மூன்று புறமும் மூன்று லட்சுமிகள். ஆக எட்டு லட்சுமிகள் இருக்கின்றார்கள். இந்த மாடி கட்டி குடியிருக்கும் சாமிகளைப் பார்த்தா இந்த ஆச்சியம் கொண்டாய் என நீங்கள் கேட்டால், இல்லை.

கருவரையில் உண்டியல்

கருவரையில் உண்டியல்

இதைத்தாண்டியும் ஒரு ஆச்சிரியம் எங்களுக்காக காத்திருந்தது. ஒவ்வொரு கருவரையிலும் ஒரு ஐயர் தட்டுயெந்தி அமர்ந்திருந்தார். அதோடு திரும்பி இடமெல்லாம் சின்னதும் பெரியதுமாய் உண்டியல்கள் பயமுருத்திக் கொண்டிருந்ததன. ஒரு கருவரை எதிரே அதிகமான கூட்டம், அந்த கருவரை தைரியலட்சுமியுடையது. அங்கே செல்லும் போது, காலை இடறியது ஒரு பொருள். என்னவென்று பார்த்தால் ஒரு குட்டி உண்டியல். நிறைய இடங்களில் பால் கேனை துளையிட்டு உண்டியலாக மாற்றியிருந்தார்கள்.

அதை விட ஒரு கருவரையில் மிகப்பெரிய உண்டியலையே கடவுளாக வைத்திருக்கின்றார்கள். அதற்கான கோபுர வாசலின் மேலே “பத்மநிதி” என்று எழுதப்பட்டிருந்தது. இறுதியாக,… தரிசனம், அர்ச்சனை, அர்ச்சனை பொருட்கள், பிரசாதம், தானம், பிராத்தனை என மக்களிடமிருந்து செல்வங்களை வாங்கி அங்கிருக்கும் லட்சுமிகளும், அவர்களின் அருகில் இருப்பவர்களும் செழிப்போடு இருக்கின்றார்கள். உங்களுக்கும் நேரமிருந்தால், அவர்களை காண அஷ்டலட்சுமி கோவிலுக்கு ஒரு முறை சென்று வாருங்கள்.

கோவிலின் தற்போதைய  தோற்றம்

கோவிலின் தற்போதைய தோற்றம்

கோவிலிலிருந்து கடற்கரை தோற்றம்

கோவிலிலிருந்து கடற்கரை தோற்றம்